Skip to main content

இயற்கை வளம் சுரண்டப்படுவதை நீதிமன்றம் கவனிக்கிறது!- சட்டவிரோத குடிநீர் ஆலைகள் மீதான வழக்கில் இன்று உத்தரவு!

Published on 04/03/2020 | Edited on 04/03/2020

சட்டவிரோத குடிநீர் ஆலை நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (03/03/2020) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
 

அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், அனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை மூடியது குறித்து அறிக்கை தாக்கல் செய்தார். அதில்,  தமிழகம் முழுவதும் மொத்தம் 682 குடிநீர் ஆலைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

CHENNAI HIGH COURT WATER PLANT CASE TODAY HEARING

சீல் வைக்கப்பட்ட அந்த ஆலைகளுக்கான மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்த அவர், உரிமத்தை புதுப்பிக்கக் கோரி 116 விண்ணப்பங்கள் வந்துள்ளதாகக் குறிப்பிட்டார். இந்த விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் போது, தண்ணீர் அளவிடும் கருவி பொருத்தப்பட்டுள்ளதா, மழைநீர் சேகரிப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து உரிமம் புதுப்பிக்கப்படும் எனவும், அதற்கு கட்டணமாக 6000 ரூபாய் வசூலிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார். எடுக்கப்படும் தண்ணீரின் அளவைக் கணக்கிட்டு, அதற்கு பணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.
 

சென்னை, கோவை, தமிழ்நாடு குடிநீர் ஆலை சங்கங்களின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் ஜி. மாசிலாமணி, பி.எஸ்.ராமன் ஆகியோர் ஏற்கனவே மூடப்பட்ட ஆலைகளால் குடிநீர் உற்பத்தி செய்து வழங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டதே தவிர, வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தெரிவிக்கவில்லை எனவும், ஆலைகள் மூடி இருக்கும்போது எப்படி வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடியும் என்றும் தெரிவித்தனர். 

இந்திய தரச்சான்று நிறுவனம், தமிழக சிறு தொழில்துறை, உணவு தரம் மற்றும் பாதுகாப்பு துறை, உள்ளாட்சி அமைப்பு மற்றும் வருமான வரித்துறை ஆகியவற்றிடம் சான்றிதழ்களைப் பெற்று ஆலைகள் இயங்கி வருவதாகக் குறிப்பிட்டதுடன், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொழிற்சாலைகள் எடுக்கும் நிலத்தடி நீரில்,  ஒரு சதவீத அளவே இந்தக் குடிநீர் உற்பத்தியாளர்கள் எடுப்பதாக அவர் குறிப்பிட்டார். செங்கல்சூளை, தோல், பண்ணை, ஸ்டீல் ஆகிய துறைகள் எடுக்கும்  நீரை அரசு கட்டுபடுத்தவில்லை என வாதிட்டனர். 


நிலத்தடி நீர்ப் பகுதிகளை நான்காகப்  பிரித்த பின்னர், பல இடங்களில் நீரின் அளவு உயர்ந்துள்ளதாகக் கூறினர். நீதிபதிகள் குறுக்கிட்டு, நிலத்தடி நீர் உயர்ந்துள்ளதால், நீரை அளவின்றி எடுக்க அனுமதிக்க வேண்டுமென அர்த்தமாகாது எனத் தெரி்வித்தனர். பல ஆண்டுகளாக சட்ட விரோதமாக தண்ணீர் எடுத்து வரும் இந்த ஆலைகள் கடந்த காலங்களில் செய்த சட்டவிரோத செயல்களுக்கு உரிய விலையைக் கொடுக்க வேண்டாமா என கேள்வி எழுப்பினர். மேலும் குடிநீர் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக பத்திரிகைகளின் வாயிலாக அறிந்ததாகவும், போராட்டம் மூலமாக நீதிமன்றத்திற்கு நெருக்கடி கொடுக்கலாம் என நினைத்தால் அது தவறு என்றும் எச்சரித்தனர். 


அனுமதியின்றி செயல்படக்கூடிய குடிநீர் ஆலைகள் சீல் வைக்கப்பட்டதை ஆய்வு செய்வதற்கு சுதந்திரமான ஒரு குழுவை அமைக்கக் வேண்டும் எனவும் தெரிவித்தனர். முறையாக உரிமம் பெற்று செயல்படும் ஆலைகளுக்கு எந்த பிரச்சினையும் இல்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், அரசின் கவனத்திற்கு தெரியாமல் இயற்கை வளம் சுரண்டப்படுகிறது என்றும், அதை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துள்ளது எனவும் குறிப்பிட்டார். குடிநீர் நிறுவனங்களுக்கு எதிராக மட்டும் வழக்கை விசாரிக்கவில்லை என்றும், ஆனால் சட்டவிரோத நீர் எடுப்பு தொடர்பான அனைத்து விசயங்களையும் கருத்தில் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து வழக்கின் மீது இடைக்கால உத்தரவு இன்று (மார்ச் 4) பிறப்பிக்கப்படும் எனத்  தெரிவித்துள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்