Skip to main content

7.5 சதவீத இடஒதுக்கீடு சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

Published on 15/12/2020 | Edited on 15/12/2020

 

chennai high court medical seats 7.5% quota students

 

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி கொண்டு வரப்பட்ட சட்டத்திற்கு, இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.

 

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி, தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது. இதன் மூலம், இந்த ஆண்டு மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பில் 405 அரசுப் பள்ளி மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 2018- ஆம் ஆண்டு, தனியார் பள்ளியில் 12- ஆம் வகுப்பு முடித்த பூஜா என்ற மாணவி, இந்தாண்டு 3 ஆவது முயற்சியாக எழுதிய நீட் தேர்வில் 565 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.

 

நீட் தேர்வில் 565 மதிப்பெண்கள் பெற்றிருந்தும் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காததையடுத்து, 7.5 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் பூஜா வழக்கு தொடர்ந்தார்.

 

இந்த வழக்கு, இன்று (15/12/2020) நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் எம்.எஸ். ரமேஷ் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ‘அரசுப் பள்ளி மாணவர்களுக்காக தமிழக அரசு கொண்டு 7.5 சதவீத இட ஒதுக்கீடு காரணமாகவே,  அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தும், எனக்கு மருத்துவ இடம் கிடைக்காமல் போனது. மேலும், நீட் தேர்வில் 200 மதிப்பெண்கள் கூட தாண்டாத அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது நியாயமற்றது. தமிழக அரசு கொண்டு வந்த 7.5 சதவீத இடஒதுக்கீடு சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். இந்த வழக்கு முடியும் வரை, 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இடங்களை இறுதி செய்யக் கூடாது.’எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.

 

ஆனால், தற்போது அனைத்து மருத்துவ இடங்களும் நிரப்பப்பட்டுவிட்டதால்,  தமிழக அரசு கொண்டுவந்த சட்டத்திற்கு, நீதிபதிகள் இடைக்காலத் தடை விதிக்க மறுத்ததோடு,‘அரசுப் பள்ளிகளின் தரம் குறைவாக இருப்பதால்தான், மாணவர்களுக்கு இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த, தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மேலும், அரசுப் பள்ளி மாணவர்களை, தங்கள் வீட்டுப் பிள்ளைகளாகப் பார்க்க வேண்டுமே தவிர, எதிரியாகப் பார்க்கக் கூடாது. ஏழை மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் சேர்க்கை கிடைப்பதை உறுதி செய்யவே, இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டுள்ளது.’ எனக் கருத்து தெரிவித்தனர்.  

 

இந்த மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், 7.5 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்த வழக்குகளோடு சேர்த்து இந்த வழக்கும் விசாரிக்கப்படும் எனத் தெரிவித்து, விசாரணையை ஜனவரி 5- ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
 

 

 

 

சார்ந்த செய்திகள்