Skip to main content

காவல்துறைக்கு சவால்; தொடரும் அசம்பாவிதம்! - பதற்றத்தில் ஜேடர்பாளையம்

Published on 08/09/2023 | Edited on 08/09/2023

 

Challenge the police; Continued disaster! Jodarpalayam in tension

 

ஜேடர்பாளையத்தில் கடந்த ஒன்றரை மாதத்திற்கு மேலாக ஓய்ந்திருந்த மர்ம சம்பவங்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளதால் பதற்றமான சூழ்நிலை உருவாகி உள்ளது. அங்கு மர்ம நபர்கள் டிராக்டருக்கு தீ வைத்ததோடு, வயல்களில் வாழை, குச்சிக்கிழங்கு பயிர்களையும் நாசம் செய்துள்ளனர்.

 

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே உள்ள வீ.கரப்பாளையத்தைச் சேர்ந்தவர் விவேகானந்தன். விவசாயி. இவருடைய மனைவி நித்யா (28). இவர், கடந்த மார்ச் 11ம் தேதி, வீட்டின் அருகே உள்ள முள் புதர் பகுதியில் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்றார். அப்போது மர்ம நபர்கள் இவரைப் பாலியல் வன்கொடுமை செய்து, கொடூரமாகக் கொலை செய்தனர். 

 

இந்த வழக்கில் 17 வயது சிறுவன் ஒருவனை ஜேடர்பாளையம் காவல்நிலைய காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் சிலருக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் கிளம்பியதை அடுத்து, வழக்கு விசாரணை உள்ளூர் காவல்துறையில் இருந்து சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. அவர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

Challenge the police; Continued disaster! Jodarpalayam in tension
கோப்புப் படம் 

 

நித்யா கொலைக்குப் பிறகு ஜேடர்பாளையம் சுற்று வட்டாரத்தில் உள்ள கரும்பு ஆலைகள், டிராக்டர், விவசாய உபகரணங்கள், தனியார் பள்ளி பேருந்து ஆகியவற்றுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். சிலரின் வீடுகளில் பெட்ரோல் குண்டுகள் வீசினர். எம்.ஜி.ஆர். என்கிற முத்துசாமி என்பவர் நடத்தி வரும் கரும்பாலையில் வடமாநிலத் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அவர்கள் தங்கியிருந்த கொட்டகை மீது பெட்ரோல் குண்டு வீசியதில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ் என்ற வாலிபர் கொல்லப்பட்டார். 

 

இது மட்டுமின்றி, முருகேசன் என்பவரின் வயலில் இருந்த வாழை மரங்களை மர்ம நபர்கள் வெட்டிச் சாய்த்தனர். பின்னர், பொத்தனூரைச் சேர்ந்த சவுந்தரராஜனின் வயலில் 3000 பாக்கு மரக்கன்றுகளை வெட்டி வீழ்த்தினர். அதன் தொடர்ச்சியாக சில விவசாயிகளின் வயல்களில் பயிரிடப்பட்டு இருந்த குச்சிக்கிழங்கு பயிர்களையும் மர்ம நபர்கள் நாசம் செய்தனர். 

 

தொடர்ச்சியாக அட்டூழியங்கள் அரங்கேறி வந்த நிலையில் கடந்த ஐந்து மாதத்திற்கு மேலாக சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட காவலர்கள் ஜேடர்பாளையம், வீ.கரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

 

Challenge the police; Continued disaster! Jodarpalayam in tension
கோப்புப் படம் 

 

பல இடங்களில் புதிதாகச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டும், சின்ன சின்ன கிராமங்களிலும், முக்கிய சாலை சந்திப்புகளிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆனாலும், வயல்களில் இறங்கி நாசம் செய்து வந்த கும்பலை இதுவரை காவல்துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவி வருகிறது. மற்றொருபுறம் காவல்துறையின் தீவிர கண்காணிப்பு காரணமாக கடந்த 50 நாள்களுக்கும் மேலாக அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் இருந்தன. 

 

இதனால் அங்கு குவிக்கப்பட்டுள்ள காவல்துறை பாதுகாப்பை விலக்கிக் கொள்ள வாய்ப்பு உள்ளதாகக் கருதப்பட்டது. இந்நிலையில், செப். 6ம் தேதி நள்ளிரவு, பல்லக்காபாளையம் அருகே, கருப்பண்ணன் மகன் சுப்ரமணி என்பவருக்குச் சொந்தமான வயலில் மர்ம நபர்கள் புகுந்து, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த டிராக்டர் வாகனத்திற்கு தீ வைத்து எரித்துள்ளனர். மேலும், அருகில் உள்ள வீரமணி (40), ராமசாமி (70) ஆகியோருக்குச் சொந்தமான வயலில் வாழை மரங்கள், குச்சிக்கிழங்கு செடிகளையும் வெட்டிச் சாய்த்துள்ளனர். இதனால் மீண்டும் அப்பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை உருவாகி உள்ளது. 

 

Challenge the police; Continued disaster! Jodarpalayam in tension
கோப்புப் படம்

 

இதுகுறித்து தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட எஸ்.பி. ராஜேஷ்கண்ணன், சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி மற்றும் காவல்துறையினர் நிகழ்விடம் சென்று பார்வையிட்டனர். இரவு பகலாக 7 மாவட்டக் காவல்துறை கண்காணிப்பு, அனைத்து முக்கிய சாலை சந்திப்புகளிலும் சி.சி.டி.வி. கேமராக்கள், காவல்துறை அதிகாரிகளின் இரவு ரோந்து என பலகட்ட கண்காணிப்பையும் மீறி இப்படியான அசம்பாவிதங்கள் நடந்துள்ளதால் ஒட்டுமொத்த காவல்துறையின் தூக்கத்தையும் கெடுத்துள்ளது. மேலும், இந்த சம்பவம் காவல்துறைக்கு விடுக்கப்பட்ட சவாலாகவே கருதப்படுகிறது. 

 

இதற்கிடையே, டிராக்டருக்கு தீ வைப்பு மற்றும் வயல்களை நாசப்படுத்திய சம்பவம் தொடர்பாகச் சந்தேகத்தின் பேரில் பத்து பேரை காவல்துறையினர் பிடித்துச்சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அமைதி திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் மர்ம நபர்கள் தீ வைப்பு, வயல்வெளிகளைச் சேதப்படுத்திய சம்பவத்தால் காவல்துறை மட்டுமின்றி பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்