சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில்குமார் என்பவர் ஒரு பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் மாடுகளைக் கட்டுப்படுத்துவதற்காக அதன் மூக்கில் துளையிட்டு மூக்கணாங்கயிறு போடுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு கடந்த வாரம் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பேனர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் உலக அளவில் மாடுகளைக் கட்டுப்படுத்த இந்த நடை முறைதான் பின்பற்றப்படுகிறது. தற்போது இந்த வழக்கின் மூலம் புதிய விதிகளை வகுத்து உலகத்தைப் பின்பற்றச் செய்வோம் என்று கருத்து தெரிவித்துள்ளதுடன் இந்த வழக்கு மத்திய மாநில அரசுகள் 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளனர்.
ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஒண்டிராஜ் இன்று திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசுகையில், “மாடுகளைக் கட்டுப்படுத்துவதற்காக அதன் மூக்கில் துளை இட்டு கயிறு போடுவது மிருக வதைத் தடை சட்டப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு முன்னோர்களால் இன்று வரை பின்பற்றப்பட்டும் வருகிறது. உண்மையில் மாடு வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகளுக்கு இந்த விளக்கம் மிகவும் அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக அமைந்துள்ளது. உறவு இல்லாமல் மாடுகள் இல்லை மாடுகள் இல்லாமல் உறவு இல்லை எல்லா உலக பணிகளுக்கும் மாடு அவசியம் என்ற நிலையில் வீட்டில் வளர்க்கக் கூடிய பசு மாடுகளும் கூட மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல மூக்கணாங்கயிறு அவசியம்.
அவற்றைப் பட்டிகளில் அடைக்க மூக்கணாங்கயிறு அவசியம், இப்படி காலம் காலமாக விவசாயிகளுக்கும் மாடுகளுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான உறவுப் பாலமாக மூக்கணாங்கயிறு இருந்து வருகிறது. இந்நிலையில் இது நன்கு தெரிந்தும் கூட உயர்நீதிமன்றத்தில் இப்படிப்பட்ட ஒரு வினோதமான வழக்கைத் தாக்கல் செய்திருப்பது தங்களுக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும் மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு அளிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விவசாயிகளின் சார்பில் நீதிமன்றத்துக்குத் தெரியப்படுத்தும் வகையிலும் இந்த வழக்கில் நல்ல முடிவு எடுக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளோம்.
அந்த மனு விசாரணைக்கு வரும் போது தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க உள்ளோம் என்றும் வழக்கில் விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்றும் மத்திய மாநில அரசுகளுக்குக் கோரிக்கையை முன்வைப்பதாகத் தெரிவித்துள்ளனர். மூக்கணாங்கயிறு போடவில்லை என்றால் பால் உற்பத்தி தடைபடும், பால் உற்பத்தி தடைப்பட்டால் பால் தட்டுப்பாடு காரணமாக வெளிநாடுகளிலிருந்து பால் பவுடர்களை இறக்குமதி செய்ய வேண்டிய இடத்திற்கு தள்ளப்படுவோம்” என கூறினார். அதே போல வெளிநாடுகளில் மட்டுமே மூக்கணாங்கயிறு இல்லாத பசுக்கள் குறிப்பாக ஜெர்சி பசுக்கள் உள்ளது. அவற்றை இந்தியாவிற்கு கொண்டு வர மத்திய அரசு முயற்சி செய்து வருவதாகக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.