Skip to main content

'சிபிஐ விசாரணை சரியில்லை; சொத்துப்பட்டியல் எடுக்க வேண்டும்' - உயர்நீதிமன்றம் அதிரடி

Published on 15/07/2024 | Edited on 15/07/2024
nn

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காகச் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின் மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாகத் தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர் மற்றும் என். செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த (01.07.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் எதிர் மனுதாரராகச் சேர்க்கப்பட்டிருந்த அப்போதைய தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் லிங்க திருமாறன் தரப்பில், “மனித உரிமை ஆணைய சட்டத்தின்படி ஏற்கெனவே முடிக்கப்பட்ட வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது. மாநில மனித உரிமை ஆணையமும் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையமும் விசாரித்த இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க முடியாது” என வாதிடப்பட்டது.

இதற்கு மனுதாரரான ஹென்றி திபேன், “மனித உரிமை ஆணைய சட்டத்தின்படி மனித உரிமை ஆணையங்கள் பிறப்பிக்கும் உத்தரவை மறு ஆய்வு செய்ய முடியும். அந்த வகையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரிக்கை வைத்துள்ளேன். இதற்கு எந்த தடையும் இல்லை” என வாதிட்டார். இதற்கிடையே சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் கூடுதல் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. எனவே இந்த வழக்கைத் தொடர மனுதாரருக்கு எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை” எனத் தெரிவித்திருந்தார்.

nn

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “அப்பாவி பொதுமக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்காக எந்த அதிகாரியும் இதுவரை வருந்தவில்லை. அதிகாரிகள் மீது கொலை வழக்கு ஏன் தொடரக் கூடாது. துப்பாக்கிச்சூடு நடத்தும்படி உத்தரவிட்டது யார்?. இத்தனை உயிர்கள் பறிபோனதற்குப் பொறுப்பேற்றுக் கொள்ளப்போவது யார்?” எனக் கேள்வி எழுப்பினர். மேலும் இந்த எதிர் மனுதாரர்களின் ஆட்சேபத்துக்குப் பதிலளிக்க மனுதாரரான ஹென்றி திபேனுக்கு  நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை வரும் ஜூலை 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது, அப்போது, 'இத்தனை ஆண்டுகளாக சிபிஐ விசாரணை நடந்தும் இந்த வழக்கில் பலன் இல்லாமல் உள்ளது. சிபிஐ விசாரணை சரியில்லை.  ஒரு நபர் ஆணையம் அமைத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் பின்புலம் என்ன என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம். இந்த வழக்கை பொறுத்தவரை அந்த காலகட்டத்தில் சில நபர்கள் மூலம் அரசு அதிகாரிகள் குறிப்பாக காவல்துறை சார்ந்த அதிகாரிகளின் சொத்துக்களின் மதிப்பு அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே இது குறித்து லஞ்ச ஒழிப்பு காவல்துறை விசாரிக்க வேண்டும். இது தொடர்பாக அவர்களுடைய சொத்து பட்டியலை எடுக்க வேண்டும். அந்த விவரங்களை நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை மேலும் இரண்டு வார காலத்திற்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்