Skip to main content

பள்ளிக்கு சீல் வைத்த அறநிலையத்துறை! -பெற்றோர்கள் தொடர்ந்த வழக்கில் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் விளக்கமளிக்க உத்தரவு!

Published on 22/08/2020 | Edited on 22/08/2020

 

தமிழக இந்து சமய அறநிலையத்துறை சீல் வைத்த பள்ளி, தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், தமிழக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் விளக்கமளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்குச் சொந்தமாக உள்ள 35 ஏக்கர் நிலத்தில், தர்மமூர்த்தி ராவ்பகதூர் காலவள கண்ணன்செட்டி அறக்கட்டளைக்குச் சொந்தமான சீதா கிங்ஸ்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 50 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறது. மழலையர் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள அந்தப் பள்ளியில்,  ஏறத்தாழ ஆயிரம் மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

 

இந்நிலையில், 1999-ஆம் ஆண்டுடன் குத்தகை முடிந்ததாலும், முறையாக வாடகை வராததாலும், ஜூலை 23-ஆம் தேதி, இந்து சமய அறநிலையத் துறையினர் பள்ளி வளாகத்திற்கு சீல் வைத்தனர்.
 

ஆயிரம் மாணவ, மாணவியர் படிக்கும் சீதா கிங்க்ஸ்டன் பள்ளிக்கு சீல் வைத்ததால், அவர்களின் கல்வி பாதிக்கப்படுவதுடன், எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிடும் என்ற அச்சத்தில், மாணவர்களின் பெற்றோர்களான டி.ஜெரினா, ஏ.ராமதூதன் உள்ளிட்ட 7 பேர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
 

அவர்களது மனுவில், அறநிலையத்துறை உதவி ஆணையரின் நடவடிக்கை குறித்து ஜூலை 6-ஆம் தேதியே மெட்ரிக் பள்ளிகள் இயக்குநருக்கும், கோவில் செயல் அலுவலருக்கும் நோட்டீஸ் அனுப்பினோம். ஆனால், மாணவர்களின் நலனைக் காக்கும் நோக்கில் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் செயல்படவில்லை.
 

மாணவர்களின் நிலை கருதி,  மெட்ரிக் பள்ளிகள் இயங்குவதற்குத் தேவைப்படும் குறைந்தபட்ச 6 கிரவுண்ட் நிலத்தை எடுப்பதற்குக்கூட, மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. பள்ளி இயங்கும் கட்டிடத்திற்கு சீல் வைப்பதற்கு முன்பாக, பெற்றோர்களிடம் அறநிலையத்துறை முறையாகத் தெரிவிக்கவில்லை. எனவே, தேவையான 6 கிரவுண்ட் நிலத்தை அறநிலையத் துறையிடமிருந்து பெற்று, பள்ளி செயல்படுவதற்குரிய நடவடிக்கையை எடுக்க மெட்ரிக் பள்ளிகள் இயக்குநருக்கு உத்தரவிட வேண்டுமெனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

http://onelink.to/nknapp

 

இந்த மனு,  நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு குறித்து மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரும், இந்துசமய அறநிலையத்துறையும் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை செப்டம்பர் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கத்தோடு பள்ளி மீது தாக்குதல்; வெளியான அதிர்ச்சி வீடியோ!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Incident on school chanting Jai Sriram  Shocking video released in telangana

தெலுங்கானா மாநிலம், மன்செரியல் மாவட்டம், கண்ணேபல்லி கிராமத்தில் அன்னை தெரசா உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், அந்தக் கிராமத்திலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்தும் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று(18-04-24) 50க்கும் மேற்பட்டவர்கள் காவி உடை அணிந்து, இந்தப் பள்ளிக்குள் நுழைந்து, அங்கிருந்த அன்னை தெரசா சிலை உள்ளிட்டவற்றின் மீது கல் வீசி பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், அவர்கள் ஜெய்ஸ்ரீ ராம் என்று முழக்கமிட்டவாறு அந்தப் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதத்ளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து பள்ளியின் முதல்வரான கேரளாவைச் சேர்ந்த ஜெய்மன் ஜோசப்பிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு காவி நிற உடை அணிந்து சில மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். இதனைக் கண்ட அப்பள்ளி முதல்வர், அந்த மாணவர்களை அழைத்து விசாரணை நடத்தியுள்ளார்.

அதற்கு அந்த மாணவர்கள், 21 நாள்கள் அனுமன் தீட்சை சம்பிரதாயத்தைக் கடைபிடிப்பதாக கூறியுள்ளனர். அதனால், பள்ளி முதல்வர், மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களைப் பள்ளிக்கு அழைத்து வருமாறு கூறியுள்ளார். இதன் காரணமாக, இன்று காவி உடை அணிந்து வந்த கும்பல் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது.. .

மேலும், இந்தத் தாக்குதலில் பள்ளி முதல்வர் ஜோசப்பை சுற்றி வளைத்து அடித்து, அவரது நெற்றியில் வலுக்கட்டாயமாக திலகமிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், மத உணர்வுகளைத் தூண்டுதல், மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்ப்பது தொடர்பான பிரிவுகளின் கீழ் பள்ளி முதல்வர் உட்பட இரண்டு ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

'கடைசி நேரத்தில் இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'- நீதிமன்றம் பதில்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Can't order transfer at the last moment'- court reply

தமிழக கூடுதல் டிஜிபி அருண் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எனவே அவரை  இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரி அருணை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.  

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையம் சார்பில் காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி அருண் ஒரு கட்சிக்காக செயல்படுகிறார். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் அந்த அதிகாரி இருப்பதாகவும் ஆகவே எந்த அச்சமும் மனுதாரர் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி யாராக இருந்தாலும் தேர்தல் நடவடிக்கையை பொறுத்தவரை சரியான முறையில் இயங்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. கடைசி நேரத்தில் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'  எனக் கூறி இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர்.