Skip to main content

கஞ்சா விற்பனையை தட்டிக் கேட்டவர் கொலை... வெங்கந்தூரில் பரபரப்பு! 

Published on 08/05/2022 | Edited on 08/05/2022

 

cannabis sale Incident in vilupuram

 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகில் உள்ளது வெங்கந்தூர் கிராமம். இங்குள்ள காலனி பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கம். அவரது மகன் ஞானவேல் (வயது 35). இவர் அப்பகுதியில் உள்ள செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை செய்து தனது மனைவி பிள்ளைகளை காப்பாற்றி வருகிறார். சென்னை சேர்ந்த (வயது 25)  அசோக். இவரது நண்பர் பொய்யாதப்பன் (வயது 30) . இவர்கள் இருவரும் அதேப்பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் தங்கிக்கொண்டு வெளியிலிருந்து கஞ்சாவை மொத்தமாக வரவழைத்து அப்பகுதியிலிருந்தபடி பல்வேறு பகுதிகளுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வந்துள்ளனர்.

 

இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் கஞ்சா விற்பனை செய்த இருவரையும் கண்டித்துள்ளனர். அப்படியும் அவர்கள் இருவரும் கஞ்சா விற்கும் தொழிலை நிறுத்தவில்லை. இதனால் அப்பகுதி இளைஞர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாவது அதிகரித்தது. இதனால் அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் பலர் ஒன்று சேர்ந்து போலீசுக்கு புகார் கொடுப்பதற்காக காவல் நிலையம் சென்றுள்ளனர். அவர்களுடன் செங்கல் சூளை தொழிலாளியான ஞானவேலும் சென்றுள்ளார். இதன் காரணமாக கஞ்சா விற்பனை செய்துவந்த அசோக் பொய்யாதப்பன் ஆகிய இருவரும் ஞானவேல் மீது கடும் விரோதம் கொண்டிருந்தனர். இந்நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் ஞானவேல் வெளியில் சென்று விட்டு தனியாக தனது வீட்டுக்குத் திரும்பி வந்துகொண்டிருந்தபோது அவரை வழிமறித்த கஞ்சா வியாபாரிகள் இருவரும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஞானவேல் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு இருவரும் தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. அந்த வழியாக வந்த சிலர் ஞானவேல் இறந்து கிடப்பதைப் பார்த்துவிட்டுக் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து விழுப்புரம் டிஎஸ்பி பார்த்திபன், இன்ஸ்பெக்டர் விநாயக முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஞானவேல் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

இந்நிலையில் ஞானவேல் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து கொலையாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி தீவனூர் கூட்டுரோடு பகுதியில் நேற்று இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக கொலையாளிகளைக் கைது செய்வதாக போலீசார் உறுதியளித்ததின் பேரில் பொதுமக்கள் சாலை மறியலைக் கைவிட்டனர்.

 

கொலைசெய்யப்பட்ட ஞானவேலுக்கு விஜயகுமாரி என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். கஞ்சா வியாபாரம் செய்தவர்களை ஊர் மக்களோடு சேர்ந்து தட்டிக்கேட்ட குற்றத்திற்காக அப்பாவி இளைஞனை இரக்கம் இல்லாமல் கொலை செய்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. இப்படி சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறையிடம் புகார் கொடுப்பவர்கள் கொலை செய்யப்படும் சம்பவங்கள் அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களை நடுத்தெருவில் நிற்க வைக்கிறது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்