பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசால் கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் (C.A.A.) கொண்டுவரப்பட்டது. அதில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.
அதாவது இந்த சட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க சி.ஏ.ஏ. வகை செய்கிறது. அதே சமயம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் இஸ்லாமிய மக்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படவில்லை. மேலும் தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவும் சிஏஏ சட்டத்தில் வழிவகை செய்யப்படாததும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி இருந்தார். இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் நேற்று மாலை முதல் (11.03.2024) அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது.
மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு, பல்வேறு எதிர்க்கட்சிகள், தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் 'தமிழகத்தில் சிஏஏவை அமல்படுத்த மாட்டோம்' என தமிழக முதல்வர் அதிரடியாக அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சி.ஏ.ஏவை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம். ஒன்றிய பாஜக அரசின் திருத்தச்சட்டம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.
நாட்டின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் எந்த ஒரு சட்டத்துக்கும் தமிழ்நாடு அரசு இடம் கொடுக்காது. மக்களவைத் தேர்தல் தொடங்கும் நேரத்தில் அவசரகதியில் சி.ஏ.ஏ சட்டத்தை ஒன்றிய அரசு அமல்படுத்தியுள்ளது. இந்த சட்டத்தால் என பயனோ, நன்மையோ இருக்கப்போவதில்லை. சி.ஏ.ஏ சட்டம் முற்றிலும் தேவையற்ற ஒன்று என்பதைவிட ரத்து செய்யப்பட வேண்டிய ஒன்று என்பதே தமிழக அரசின் கருத்து. சி.ஏ.ஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் நிறைவேற்ற தமிழக அரசு எந்த வகையிலும் இடமளிக்காது. உச்சநீதிமன்றத்தின் கண்டனத்தில் இருந்து தப்பிக்க மக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கத்துடன் இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. சிறுபான்மை சமூகத்தினர் மற்றும் முகாம் வாழ் தமிழர்களின் நலனுக்கு எதிரானது இந்த சட்டம்' என தெரிவித்துள்ளார்.