Skip to main content

தேர்தலை நோக்கமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள பட்ஜெட்: ராமதாஸ்

Published on 01/02/2019 | Edited on 01/02/2019
Piyush Goyal


மத்திய அரசு தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட் தேர்தலை நோக்கமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள பட்ஜெட் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

2019-20 ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் இன்று செய்யப் பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் இன்னும் ஒரு மாதத்தில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், எதிர்பார்க்கப் பட்டவாறே பல சலுகைகள் நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. எனினும், வேலைவாய்ப்பையும், வளர்ச்சியையும் ஊக்குவிப்பதற்கான திட்டங்கள் அறிவிக்கப்படாதது பெரும் குறையாகவே உள்ளது.
 

இந்தியாவில் சபிக்கப்பட்ட சமுதாயமாக உழவர்கள் இருப்பதால், அவர்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வந்தது. பாட்டாளி மக்கள் கட்சியின் நிழல் நிதிநிலை அறிக்கையிலும் உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 மூலதன மானியம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. அதற்கு மதிப்பளிக்கும் வகையில், 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்துள்ள உழவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும்; கடந்த திசம்பர் மாதத்திலிருந்து முன்தேதியிட்டு இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று நிதிநிலையில் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. எனினும் ஏக்கர் கணக்கில் நிதியுதவி வழங்காமல், விவசாயி கணக்கில் நிதியுதவி வழங்குவது எதிர்பார்த்த பலனை வழங்காது. குறைந்தபட்சம் ஹெக்டேருக்கு ஆண்டுக்கு ரூ.10,000 நிதியுதவி வழங்கும் வகையில் இத்திட்டத்தை அரசு மாற்றியமைக்க வேண்டும்.
 

இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த உழவர்களுக்கு, அவர்கள் வாங்கிய வங்கிக் கடன் மீது 2% வட்டி மானியம் வழங்கப்படும்; கடனை தவணை தவறாமல் செலுத்துவோருக்கு மேலும் 3% வட்டி மானியம் வழங்கப்படும் என்பதும் முழுமையான பலனைத் தராது. இயற்கைச் சீற்றங்களால்  பாதிக்கப்பட்ட உழவர்களின் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்வது தான் அவர்களின் துயரைத் துடைக்கும்.
 

வருமானவரி செலுத்தாமல் இருப்பதற்கான வருவாய் உச்சவரம்பு ரூ.2.50 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும். அதேபோல், நிரந்தரக்கழிவு ரூ.40 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது. இதன்மூலம், நேர்மையாக வரி செலுத்துவோரின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேநேரத்தில் வருமானவரி விதிதங்களில் மாற்றம் செய்யப்படாதது ஏமாற்றமளிக்கிறது. குறைந்தபட்ச வருமான வரி விகிதம் 20% என்பதை ஏற்க முடியாது. ரூ. 5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்திற்கான வரியை இப்போதுள்ள 20 விழுக்காட்டில் இருந்து 10% ஆக  குறைக்க அரசு முன்வர வேண்டும்.  அமைப்புசாரா தொழிலாளர்கள் மாதம் ரூ.100 செலுத்தினால், அவர்களின் 60-ஆவது வயதுக்குப் பிறகு மாதம் ரூ.3000 வழங்கும் புதிய ஓய்வூதியத் திட்டமும் வரவேற்கத்தக்கது. இ.எஸ்.ஐ. சலுகை பெறுவதற்கான வருமான உச்சவரம்பு ரூ.21 ஆயிரமாக உயர்த்தப்பட்டிருப்பது அடித்தட்டு தொழிலாளர்களுக்கு  பயனளிக்கும்.
 

நாடு முழுவதும் 21 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன அல்லது அமைக்கப்பட்டு வருகின்றன; 22-ஆவது எய்ம்ஸ் ஹரியானா மாநிலத்தில் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்றான மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க தனியாக நிதி எதுவும் ஒதுக்கப்பட்டதாக தெரியவில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உடனடியாக நிதி ஒதுக்கி அடுத்த இரு ஆண்டுகளில் எய்ம்ஸ் மருத்துவமனையை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
 

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு நடப்பாண்டில் ரூ.60,000 கோடி நிதி ஒதுக்கியும் அது போதவில்லை. இத்தகைய நிலையில் வரும் ஆண்டுக்கும் அதே அளவு நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பது போதிய வேலைவாய்ப்புகளை உருவாக்காது. கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட முக்கியத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளும் போதுமானவையல்ல. முழுமையான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் போது அனைத்து துறைகளுக்குமான நிதி ஒதுக்கீடும் அதிகரிக்கப்பட வேண்டும்.
 

தொடர்வண்டித்துறைக்கு ரூ.64,587 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்துறையின் மூலதன செலவுகளுக்கான இலக்கு ரூ. 1,58,658 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மூலதன செலவுகளுக்கான இலக்கு ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கப்பட்டு வரும் போதிலும் தமிழகத்தில் தொடர்வண்டித் திட்டங்களுக்கு போதிய அளவில் நிதி ஒதுக்கப்படாதது கண்டிக்கத்தக்கது ஆகும். தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள தொடர்வண்டித் திட்டங்கள் அனைத்தையும் விரைந்து முடிக்கும் வகையில் தெற்கு  தொடர்வண்டித் துறைக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யும்படி பா.ம.க. சார்பில் வலியுறுத்துகிறேன்.

 

நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் தான் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிகின்றன. இத்தகைய சூழலில் வேலைவாய்ப்புகளைப் பெருக்க போதிய அளவில் திட்டங்கள் அறிவிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது. மொத்தத்தில் தேர்தலை நோக்கமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள நிதிநிலை  அறிக்கை வரவேற்கத்தக்க பல அம்சங்களையும், ஏமாற்றமளிக்கும் சில அம்சங்களையும் கொண்டுள்ளது. இவ்வாறு கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

'வகுப்புக்கு ஓர் ஆசிரியரை உறுதி செய்ய வேண்டும்'-ராமதாஸ் கோரிக்கை

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 'One teacher should be confirmed for the class' - Ramadoss' demand

'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி  இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்துவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி  இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் மிக அதிக எண்ணிக்கையில் ஓராசிரியர் பள்ளிகள் இருக்கும் நிலையில், அதை சரி செய்யாமல் ஆசிரியர்கள் மாணவர்கள் விகிதத்தை செயற்கையாக குறைத்துக் காட்டி, இருக்கும் ஆசிரியர்களையும் வேறு பள்ளிகளுக்கு மாற்றுவது  ஏற்கனவே நலிவடைந்த நிலையில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்துவதற்கே வழி வகுக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் தொடக்கப்பள்ளிகளில் 1:19 என்ற அளவிலும், நடுநிலைப் பள்ளிகளில் 1:21, உயர்நிலைப் பள்ளிகளில் 1:22, மேல்நிலைப் பள்ளிகளில் 1:30 என்ற அளவிலும் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இந்த புள்ளிவிவரங்களைப் பார்த்தால் தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக இருப்பதாகத் தோன்றும். ஆனால், இவை அனைத்தும் மிகைப்படுத்தப்பட்ட, திரிக்கப்பட்ட, உண்மைக்கு மாறான புள்ளிவிவரங்கள் ஆகும். அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு இது எந்த வகையிலும் உதவாது.

தொடக்கப்பள்ளிகளில் 19 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் இருந்தால் அது அரசு -பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெருமளவில் பங்களிக்கும். ஆனால், உண்மை நிலை அதுவல்ல. ஆசிரியர்கள், மாணவர்கள் விகிதம் வகுப்பறை அளவில் கணக்கிடப்பட வேண்டும். அதாவது, ஆசிரியர், மாணவர்  விகிதம் 1:20 என்றால், ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் வரை இருந்தால் ஓர் ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். அதற்கும் கூடுதலாக இருந்தால் அந்த வகுப்பு இரண்டாக பிரித்து இரு ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மாநில அளவில் தான் இந்த விகிதம்  கணக்கிடப்படுகிறது. தொடக்கப்பள்ளிகளின் ஆசிரியர், மாணவர் விகிதம் 1:19 என்றால், தமிழ்நாட்டில்  தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 10,000 பேர் இருந்தால், 1.90 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். இது சரியல்ல. இத்தகைய ஆசிரியர், மாணவர்கள் விகிதத்தில் தரமான கல்வியை வழங்குவது சாத்தியமல்ல.

தமிழக அரசு வகுத்துள்ள ஆசிரியர், மாணவர் விகிதத்தின்படி, ஒரு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிலும் தலா 7 மாணவர்கள் இருப்பதாக வைத்துக் கொண்டால், அந்தப் பள்ளிக்கு இரு ஆசிரியர்கள் மட்டுமே வழங்கப்படுவார்கள். மூன்றாவது  ஆசிரியரோ, நான்காவது ஆசிரியரோ இருந்தால் அவர்கள் உபரியாக கருதி வேறு பள்ளிகளுக்கு மாற்றப்படுவர்.

ஒரு வகுப்பில் ஒரு மாணவர் இருந்தாலும், அவருக்கு கற்பிக்க ஓர் ஆசிரியர் இருக்க வேண்டும் என்பது தான் இயற்கை விதியாகும். ஆனால், ஐந்து வகுப்புகளில் 19 மாணவர்கள் இருந்தால் ஒரே ஒரு ஆசிரியரும், 38 அல்லது அதற்கும் குறைவான மாணவர்கள் இருந்தால் இரு ஆசிரியரும் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என்பது என்ன நியாயம்? 5 வகுப்புகளை ஓர் ஆசிரியரோ அல்லது இரு ஆசிரியர்களோ கவனித்துக் கொள்ள வேண்டும் என்றால் அவர்களால் மாணவர்களுக்கு எவ்வாறு கற்பிக்க முடியும்?

தமிழக அரசின் தொடக்கக் கல்வித்துறை கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி  தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 22,831 தொடக்கப் பள்ளிகள், 6587 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 29,418 பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 69,640 மட்டும் தான். இந்த பள்ளிகளில் வகுப்புக்கு ஒரே ஒரு பிரிவு என்று வைத்துக் கொண்டால் கூட  மொத்தம் 1,66,851 வகுப்புகள் இருக்கக்கூடும். அதன்படி பார்த்தால் 97,211 வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லை. இதுவும் கூட இரு ஆண்டுகளுக்கு முந்தைய நிலவரம் தான். இப்போது ஆசிரியர் இல்லாத வகுப்புகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் கூடுதலாக இருக்கும். உண்மை நிலை இவ்வாறு இருக்க 2236 ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக கூறுவது கேலிக்கூத்து.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகளை கட்டுவதற்காக ரூ.7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இரு ஆண்டுகள் ஆகியும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் புதிய வகுப்பறைகள் கட்டப்படவில்லை.

அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உண்மையாகவே தமிழக அரசுக்கு இருக்குமானால், அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை உடனடியாக வலுப்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக பொய்க்கணக்கு காட்டுவதை விடுத்து வகுப்புக்கு குறைந்தது ஓர் ஆசிரியரை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.

Next Story

தமிழ்நாடு கேட்டது... மத்திய அரசு கொடுத்தது - நிவாரண நிதி ஒதுக்கீடு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Central government relief fund allocation to tamilnadu

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு இதுவரை நிதி வழங்காமல் இருந்தது.

இதற்கிடையில், வெள்ள பாதிப்புகளுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.2 ஆயிரம் கோடி வழங்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் கடந்த 3ஆம் தேதி தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தமிழகம் சந்தித்து வரும் இயற்கை பேரிடர்கள் பற்றியும் அதன் விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் பெயரில், தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் குமணன் இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரண நிதியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.