Skip to main content

சிறுவனின் உயிரைப் பறித்த பள்ளம்

Published on 30/11/2022 | Edited on 30/11/2022

 

boy passed away after falling into pit dug for Anganwadi centre

 

பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள மாவிலங்கை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி சங்கீதா. இந்த தம்பதியின் 3 வயது மகன் ரோஹித்சர்மா. கடந்த திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் ரோகித் சர்மாவும் அவரது உறவுக்கார குழந்தைகளும் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது.

 

செல்வம் வீட்டின் அருகே புதிதாக அங்கன்வாடி மையம் கட்டுவதற்காகப் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. ஆனால், அந்தப் பள்ளத்தில் தற்போது மழைநீரும் தேங்கியுள்ளது. இது தெரியாமல் விளையாடிக் கொண்டிருந்த ரோகித் சர்மா எதிர்பாராத விதமாக அந்தப் பள்ளத்தில் விழுந்துள்ளான். அந்த சமயத்தில் ரோகித்துடன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் ரோகித் பள்ளத்தில் விழுந்த தகவலை அழுதபடி பெற்றோர்களிடம் தெரிவித்தனர்.

 

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் பள்ளத்தில் மூழ்கிய ரோஹித்தை மீட்டு கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு ரோஹித்தை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், மருத்துவமனை வளாகத்திலேயே கண்ணீர்விட்டுக் கதறி அழுதனர்.

 

இதையடுத்து சிறுவனின் உடலை பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அப்போது சிறுவனின் பெற்றோர் தரப்பில் கூறும்போது ''வீட்டுக்கு அருகில் தோண்டப்பட்ட பள்ளம் பாதுகாப்பற்ற நிலையில் இருந்ததாகக் குற்றம் சாட்டினர். இந்நிலையில் 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரம்பலூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்