Skip to main content

வீட்டில் வெடி குண்டு வீச்சு... அதிர்ச்சியில் திரண்ட கிராம மக்கள்!

Published on 30/08/2021 | Edited on 30/08/2021

 

Bomb blast at home ... Villagers gather in shock

 

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ளது பள்ளிப்பட்டு எனும் ஊர். இந்த ஊரில் உள்ள பெரிய காலனியில் உள்ள அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் திருவிழா நடத்துவது வழக்கம். இந்த ஆண்டும் எப்போதும் போல நேற்று முன்தினம் திருவிழா தொடங்கியுள்ளது. இந்தச் சமயத்தில் புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டைச் சேர்ந்த பென்னரசு என்பவரது தாத்தா-பாட்டி வீடு அந்த ஊரில் உள்ளது. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முரசொலி மாறன் அவரது அண்ணன் மாதவன் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் தென்னரசு தனது கூட்டாளிகள் 4 பேருடன் சேர்ந்து நாட்டு வெடிகுண்டு வீசி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு மேற்படி இருவரையும் தீர்த்துக் கட்டுவதற்கு திட்டமிட்டு பள்ளிப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் முரசொலி மாறன், மாதவன் ஆகியோர்களிடமிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த தென்னரசு அவரது கூட்டாளிகள் மாதவன், முரசொலி மாறன் கிடைக்காத ஆத்திரத்தில் தாங்கள் கொண்டு வந்திருந்த நாட்டு வெடிகுண்டுகளை நேற்று முன்தினம் இரவு முரசொலி மாறனின் வீட்டில் வீசியுள்ளனர்.

 

அது பயங்கரமாக வெடித்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் திரளாகக் கூடி வெடிகுண்டு வீசியவர்களைத் தேடியுள்ளனர். அதற்குள் அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது. இதுகுறித்து கண்டமங்கலம் காவல் நிலையத்திற்கு ஊர் மக்கள் தரப்பில் தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி, சப் இன்ஸ்பெக்டர் பிரேம் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி உள்ளனர். மேலும் முரசொலி மாறன் வீட்டில் வீசிய வெடிகுண்டு தரவுகளை சேகரித்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

மேலும் வெடிகுண்டு வீசிவிட்டு தப்பி ஓடிய பென்னரசு அவரது கூட்டாளிகள் அஜித் ராஜ், முகமது அஜித், சிவா . உட்பட 5 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 6 கத்திகள், இரண்டு இருசக்கர வாகனம், ஒரு செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேற்படி உள்ள நபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தின் மூலம் சிறையில் அடைத்துள்ளனர். ஏற்கனவே தென்னரசு மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. கண்டமங்கலம் அருகே கோவில் திருவிழாவின்போது வெடிகுண்டு வீசிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்