Skip to main content

தனக்கு தானே கட்டிய கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட மூதாட்டியின் உடல்! 

Published on 17/06/2022 | Edited on 17/06/2022

 

The body of an old woman buried in a grave she had built for herself!

 

திருமணம் செய்து கொள்ளாமல் 70 வயது வரை துணையின்றி தனியாக வாழ்ந்து இறந்த மூதாட்டியை, தான் உயிரோடு இருக்கும்போது கட்டிவைத்த கல்லறையில் ஊர் மக்கள் அடக்கம் செய்தனர். 

 

குமரி மாவட்டம், சூழால் ஊராட்சி பல்லுளி பகுதியைச் சேர்ந்த ரோசி (70), திருமணம் செய்துகொள்ளாமல், குடும்பத்தினருடனும் தொடர்பில்லாமல் தனியாக வாழ்ந்து வந்தார். சிறு வயதிலேயே தாய், தந்தை இறந்த நிலையில், உடன் பிறந்தவர்களும் ரோசியிடம் எந்தத் தொடர்பும் வைத்து கொள்ளாமல் தனித்தனியாக சென்று விட்டனர். இதனால் ஆரம்பத்தில் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பசியாறி வாழ்ந்து வந்த ரோசி, பின்னர் வீட்டு வேலைகள் செய்து வந்தார். இதனால் சிறு வயதில் இருந்தே தனிமையாக வாழ்ந்து வந்தவருக்கு அந்த வாழ்க்கை பிடித்துப் போகவே திருமண வயது வந்த பின்பும் திருமணம் வேண்டாம் என்று தனிமையிலேயே வாழ்ந்து வந்தார்.

 

எல்லோரையும் போல் முதுமையும் அவரை தொற்றிக்கொள்ள கடந்த 12 ஆண்டுகளாக 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை செய்து வந்தார். அந்த 12 ஆண்டுகளில் ஒரு நாள் கூட அவர், வேலைக்கு விடுப்பு எடுத்தது இல்லை. இதையொட்டி ஊராட்சி நிர்வாகமும் ரோசியை பாராட்டி உள்ளது. 

 

The body of an old woman buried in a grave she had built for herself!

 

ரோசி, தனது வீட்டு முற்றத்தின் அருகில் கிடக்கும் தனக்கு சொந்தமான ஒன்றரை சென்ட் இடத்தில் தான் உயிரோடு இருக்கும் போதே கல்லறை கட்ட முடிவு செய்து ஊராட்சியிடம் இருந்து அனுமதியும் வாங்கினார். இதையடுத்து கடந்த 5 ஆண்டுக்கு முன் 50 ஆயிரம் மதிப்பில் ஒரு கல்லறையை கட்டினார். தான் இறந்த போது உள்ளே கொண்டு வைப்பதற்காக ஒரு வாசலையும் போட்டு அதை அடைத்து வைத்திருந்தார். மேலும், ஊரில் உள்ள இளைஞர்களிடம் நான் இறந்து போனால் என்னை இந்த கல்லறையில் அடக்கம் செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார். 


ரோசி, கடந்த ஒரு வாரமாக உடல் நிலை சரியில்லாமல் வீட்டுக்குள்ளே படுத்த படுக்கையாக கிடந்தார். இந்த நிலையில், 16-ம் தேதி காலையில் வீட்டுக்குள் இருந்து துா்நாற்றம் வரவே பக்கத்தில் உள்ள ஒருவர் ரோசி வீட்டின் கதவை திறந்து பார்த்துள்ளார். அப்போது ரோசி இறந்து உடல் அழுகிய நிலையில் கிடந்தது. 

 

இதையடுத்து அங்கு ஊர் மக்கள் திரண்டனர். பின்னர் இந்தத் தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்து ரோசியின் உடல் அவர் கட்டி வைத்தியிருந்த கல்லறையில் ஊராட்சி மன்ற தலைவர் இவான்ஸ், 100 நாள் வேலை தொழிலாளர்கள் மற்றும் ஊர் மக்கள் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்டது. சொந்த பந்தங்கள் இல்லாமல் 70 ஆண்டுகளாக தனியாக வாழ்ந்த ரோசியின் அடக்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ரோசியின் மறைவு அந்தப் பகுதி மக்களை துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.   

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு; உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Published on 14/06/2024 | Edited on 14/06/2024
Doctor Subbiah case High Court action verdict

கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் பகுதியில் உள்ள ரூபாய் 10 கோடி மதிப்பிலான 2.25 ஏக்கர் நிலம் தொடர்பான நிலத்தகராறில், கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி அன்று சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டமிக்க பகுதியில் நரம்பியல் மருத்துவர் சுப்பையா கூலிப்படையினரால் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள், சம்பவம் நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் கொலை சம்பவம் தொடர்பான காட்சிகள் பதிவாகியிருந்தது.

அதனை அடிப்படையாகக் கொண்டு விசாரித்த காவல்துறையினர், ஜேம்ஸ் சதீஷ்குமார், பொன்னுசாமி, மேரி புஷ்பம், போரிஸ், வில்லியம்ஸ், பேசில், யேசுராஜன், முருகன், ஐயப்பன், செல்வ பிரகாஷ் உள்ளிட்ட 10 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்பு அவர்கள் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டனர். இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. 

Doctor Subbiah case High Court action verdict

இதனிடையே, கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான ஐயப்பன் என்பவர் அப்ரூவர் ஆனார். அதைத் தொடர்ந்து, அவர் அளித்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து உறவினர்கள் 4 பேர், கூலிப்படையினர் 5 பேர் என மொத்தம் 9 பேர் குற்றவாளிகள் என்று நீதிபதி அல்லி கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி (04.08.2021) தீர்ப்பளித்தார். அதன்படி, பொன்னுசாமி, பாசில், வில்லியம்ஸ், ஜேம்ஸ் சதீஷ்குமார், போரிஸ், முருகன், செல்ல பிரகாஷ் ஆகிய 7 பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், மேரி புஷ்பம், யேசுராஜன் ஆகிய இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் இன்று (14.06.2024) அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில் மருத்துவர் சுப்பையா கொலை செய்யப்பட்ட வழக்கில் இருந்து குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதன்படி 7 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை, 2 பேருக்கான ஆயுள் தண்டனையைச் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 

Next Story

கடல் சீற்றம்; கடற்கரைக்குச் செல்ல தடை!

Published on 10/06/2024 | Edited on 10/06/2024
Furious Sea; Prohibition to go to the beach

கன்னியாகுமரியில் கள்ளக்கடல் எச்சரிக்கை காரணமாக இன்றும் நாளையும் கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. திடீரென பலத்த காற்று வீசுவதோடு கடல் கொந்தளிப்புடன் இருக்க வாய்ப்புள்ளதால் மீனவர்கள், கடலோரப்பகுதிகளில் உள்ள மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (10.06.2024) மற்றும் நாளை (11.06.2024) ஆகிய நாட்களில் அனைத்து கடற்கரைகளிலும் கடல் சீற்றம் இயல்பைவிட அதிகமாக இருப்பதாக தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே கடலில் திடீரென பலத்த காற்று வீசுவதோடு கடலோரப்பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்பட வாய்ப்புள்ளது. எனவே மீனவர்களும், கடலோரப்பகுதிகளில் வசிக்கும் மக்களும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் சுற்றுலாப் பயணிகள் எவரும் கடற்கரைப் பகுதிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய கடற்கரையோர மாவட்டங்களுக்கும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கள்ளக் கடல் காரணமாக 3 மீட்டர் உயரம் வரை ராட்சத அலைகள் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.