Skip to main content

ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்; சேலத்தில் பரபரப்பு!

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
Black Flag Against Governor in Salem

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருக்கும் ஜெகநாதன், போலி ஆவணங்கள் தயாரித்து தனியார் நிறுவனங்களிடம் புரிந்துணர்வு மேற்கொண்டதாகப் பெரியார் பல்கலைக்கழகத் தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. பெரியார் பல்கலைக்கழகத்தின் சார்பில் கல்வி வழங்குவதற்காக துணைவேந்தரே தனி நிறுவனம் தொடங்கியிருப்பது விதிமீறல் என அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் புகாரின் பேரில் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கருப்பூர் காவல்துறையினரால் கடந்த டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி மாலை 4 மணியளவில் கைது செய்யப்பட்டார்.

போலீசாரின் விசாரணையை அடுத்து பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட மறுத்த மாஜிஸ்ரேட் தினேஷ்குமார், ஜெகநாதனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதே சமயம் துணைவேந்தர் ஜெகநாதனை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்ற பல்கலைக்கழகத்தின் ஊழியர்கள் ஆர்.என். ரவியிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

இதனையடுத்து பல்கலைக்கழகத்தின் ஊழியர்களின் இந்த கோரிக்கையை ஏற்காத தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, பெரியார் பல்கலைக்கழகத்திற்கு இன்று செல்கிறார். அங்கு முறைகேடு புகாரில் கைதாகி ஜாமீனில் உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் உள்ளிட்ட நிர்வாகிகளை சந்தித்துப் பேச உள்ளார். இந்நிலையில் முறைகேடு புகாரில் சிக்கியவர்களை சந்தித்துப் பேச உள்ள ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ‘ஆளுநரே திரும்பிப் போ...’ போன்ற முழக்கங்களை எழுப்பினர். மேலும் ஆளுநர் வருகைக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனுக்கு தொடர்பான பல்வேறு ஆவணங்களைக் கைப்பற்றி, அதன் மீது விசாரணை நடத்தியது குறித்து இன்று பெரியார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை பேராசிரியர் பெரியசாமியின் அலுவலகம், கணினி அறிவியல் அலுவலகம் உள்ளிட்ட 6 இடங்களில் 6 காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான போலீசார் இன்று சோதனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்