Skip to main content

அண்ணாமலைக்கு வைத்த பேனரில் ஏற்பட்ட தகராறு;கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள நிர்வாகிகளுக்கு தடை!    

Published on 28/06/2022 | Edited on 28/06/2022

 

BJP puthokataai issue

 

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வைரிவயலைச் சேர்ந்தவர் கவிதா ஸ்ரீகாந்த். பாரதிய ஜனதா கட்சியின் மாநில மகளிரணி செயலாளராக இருந்த இவர் மாநில மகளிரணி பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

 

இதனைத் தொடர்ந்து புதிய பொறுப்பு வழங்கிய மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு நன்றி தெரிவித்து அறந்தாங்கி நகரில் 6 இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைத்துள்ளார். இந்த பேனரில் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் மற்றும் அறந்தாங்கி நகரத் தலைவர் படம் இடம் பெறவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அறந்தாங்கி நகர பாஜக தலைவர் ரமேஷ், தனது ஆதரவாளர்களுடன் மாநில மகளிரணி பொதுச் செயலாளர் கவிதாஸ்ரீகாந்த் வைத்திருந்த பிளக்ஸ் பேனர்களை அகற்றியுள்ளார்.


இந்தத் தகவல் அறிந்து வந்த பாஜக மாநில மகளிரணி பொதுச் செயலாளர் கவிதா, அவரது கணவர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அறந்தாங்கி கட்டுமாவடி முக்கம் பெட்ரோல் பங்க் அருகே வைத்திருந்த பிளக்ஸ் பேனரை ரமேஷ் அகற்றிக் கொண்டிருந்த போது அவரிடம் ஏன் பிளக்ஸ் பேனரை அகற்றுகிறீர்கள் எனக் கேட்டுள்ளனர். அதற்கு ரமேஷ் பேனரில் மாவட்டச் செயலாளர் மற்றும் நகரத் தலைவர் படம் இல்லாமல் இருந்தது. அதனால் தான் அகற்றுகிறோம் எனக் கூறியுள்ளார்.

 

நீ யாரு பேனரை அகற்ற என்று ஸ்ரீகாந்த் கேட்க, நான் நகரம்டா என்று ரமேஷ் சொல்ல நான் மாநிலம்டா என்று ஸ்ரீகாந்த் சொல்லிக் கொண்டே தான் வைத்திருந்த பைக் சாவியால் ரமேஷ் முகத்தில் குத்தினார். இதில் காயமடைந்த ரமேஷ் சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். இச்சம்பவம் குறித்து அறந்தாங்கி காவல்நிலையத்தில் ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் அவரைத் தாக்கியதாக பாஜக மாநில மகளிரணி பொதுச் செயலாளர் கவிதா, அவரது கணவர் ஸ்ரீகாந்த், இளங்கோவன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 


இதைப்போல நகரத்தலைவர் ரமேஷ் தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதாக ஸ்ரீகாந்த் கொடுத்த புகாரின் பேரில் நகரத் தலைவர் ரமேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 
பாஜகவினர் இடையே நடைபெற்ற இந்த மோதல் குறித்த வீடியோ, சமுக வலைதளத்தில் வைரலாகியது. அறந்தாங்கியில் பிளக்ஸ் பேனர் வைத்தது தொடர்பாக பாஜகவினரிடையே நடந்த மோதல் பரபரப்பை ஏற்படுத்தியது.


இந்த நிலையில் பாஜக புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் செல்வம் அழகப்பன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “பொதுவெளியில் நம் கட்சி நிர்வாகிகள் தாக்கிக் கொண்டது கட்சிக்கு கலங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் கட்சி நிர்வாகிகள் பேனர்கள் வைத்தால் கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதுடன் ஒன்றிய தலைமை இடம்பெற வைக்க வேண்டும்.


 
இந்த மோதல் சம்பவம் குறித்து விசாரிக்கச் சென்ற மாவட்டத் தலைவரை கவிதா ஸ்ரீ காந்த் தனது அடியாட்களைக் கொண்டு முற்றுகையிட்டு கட்சி தலைமைக்கு எதிராக செயல்பட்டதற்காக இருவரும் கட்சியின் மாவட்ட, ஒன்றிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம். மேலும் இருவரையும் முன்னிறுத்தும் வகையில் நமது கட்சியினர் பேனர்கள் வைக்க வேண்டாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்