Skip to main content

ஆசிரியர் நக்கீரன் கோபால் வைகோ சந்திப்பு!!

Published on 10/10/2018 | Edited on 10/10/2018

சென்னை விமானநிலையத்தில் நேற்று நக்கீரன் பத்திரிகை ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான  நக்கீரன் கோபால் அவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிந்தாதிரிப்பேட்டை காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் விசாரணைக்கு வைக்கப்பட்டார். அப்போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆசிரியரை வழக்கறிஞர் என்ற முறையில் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு பின்னர் அவரும் கைது செய்யப்பட்டார் . 

 

meets

 

பின்னர்,  திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் மருத்துவமனையில் நடைபெற்ற மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் நக்கீரன் ஆசிரியர் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.  ஊடக பிரதிநிதியாக மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம் நேரில் ஆஜராகி 124 பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டதற்கு எதிராக வாதாடினார்.  வழக்கில் முகாந்திரம் இல்லாததால் ஆசிரியரை சிறையில் அடைக்க வேண்டும் என்ற போலீஸ் தரப்பு வாதத்தை நிராகரித்தார் நீதிபதி கோபிநாத் ஆசிரியரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.

 

இந்த விடுதலைக்கு ஆசிரியர் நக்கீரன் கோபால் அவர்கள் ''இறுதியில் கருத்துச்சுதந்திரம் வென்றது.  இதற்காக துணைநின்ற அனைவருக்கு நன்றி.  என் விடுதலைக்காக குரல் கொடுத்த அனைத்து ஊடகத்துறையினருக்கும்,  தலைவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.  நக்கீரனின் பணி தொடரும்’’என்று தெரிவித்தார்.

 

இந்நிலையில் இன்று எழும்பூரில் மதிமுக பொதுசெயலாளர் வைகோவை ஆசிரியர் நக்கீரன் கோபால் அவர்கள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். இந்த சந்திப்பின் பொழுது ஆசிரியர் நக்கீரன் கோபால் அவர்கள் பேசுகையில், ஒரே கோட்டில் நின்று ஆதரவளித்த அனைத்து பத்திரிகையாளர்கள், ஊடக நண்பர்கள், சமூக ஆர்வலர்கள் அனைவருக்கும் நன்றி. இந்த கைதை விடுதலையாக்கி உங்கள் முன் நான் நிற்க முதல் படி எடுத்த வைகோ அவர்களுக்கும் நன்றி என தெரிவித்தார்.

 

அதேபோல் வைகோ பேசுகையில், இன்று இதை கேட்காவிட்டால் நாளை இந்த நிலை அனைத்து பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களுக்கும் திணிக்கப்பட்டு கருத்து சுதந்திரம் நசுக்கப்படும். ஆளுநர் பாஜகவின் கைக்கூலியாக செயல்படுகிறார் என்றார். 

சார்ந்த செய்திகள்