தென்காசியில் சுற்றித் திரியும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது.
தென்காசி மாவட்டம் கடையத்திற்கு அருகே குடியிருப்பு ஒன்றுக்குள் கரடி புகுந்து தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடையத்தை ஒட்டிய மேற்குத் தொடர்ச்சி மலையில் புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ள நிலையில் அவ்வப்போது ஊருக்குள் புகுவது தொடர்கதையாகி வரும் நிலையில் கரடி ஒன்றின் வரவு ஊர் மக்களுக்கு அச்சத்தை கொடுத்துள்ளது.
நேற்று இரவு கருத்தப்பிள்ளையூர் பகுதியில் சிகாமணி என்பவர் வீட்டின் முன்பு கரடி ஒன்று நின்றது. அதிர்ச்சி அடைந்த வீட்டின் உரிமையாளர் கதவை தாழிட்டுக் கொண்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. கடையம் பகுதி மக்கள் இதனால் அச்சத்தில் உறைந்துள்ளனர். வனத்துறையினர் விரைவாக கூண்டு வைத்து கரடியை பிடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.