Skip to main content

அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி அறிவிப்பு விதிகளுக்கு புறம்பானது! - அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம் பதில் மனு!

Published on 30/09/2020 | Edited on 30/09/2020

 

Aryeear students pass notification! - All India Board of Technical Education reply petition!

 

 

அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பு, பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு புறம்பானது என, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

 

தமிழகத்தில், கலை அறிவியல்,  பொறியியல் எம்.சி.ஏ.,  படிப்புகளுக்கான அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த தமிழக அரசின் முடிவை ரத்து செய்யக்கோரி, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, ராம்குமார் ஆதித்தன் ஆகியோர்  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

 

இந்த வழக்குகளுக்கு பதிலளித்து அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம், பதில் மனுவைத் தாக்கல் செய்துள்ளது. 

 

அதில், தேர்வு நடத்தி மாணவர்களை மதிப்பீடு செய்யாமல், அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த தமிழக அரசின் அரசாணை, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழும விதிகளுக்கு முரணானது. கரோனா பேரிடர் காலத்தில், இறுதியாண்டு மாணவர்கள் தவிர, பிற மாணவர்களுக்குத் தேர்வு நடத்துவது சிக்கலானது என்பதால், அடுத்த கல்வியாண்டுக்கு மாணவர்களை முன்னேற்றி, அவர்கள் தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள செய்வதற்கு ஏதுவாக, பல்கலைக்கழக மானியக் குழு சுற்றறிக்கை வெளியிட்டது. இறுதி பருவத் தேர்வு கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும்  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

அனைத்துத் தேர்வுகளிலும் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு மட்டுமே பட்டம் வழங்கப்படும். மாணவர்கள் தேர்வு எழுதுவதில் இருந்து எந்த விலக்கும் அளிக்கப்படவில்லை. அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பு, விதிகளுக்கு புறம்பானது. 

 

இறுதியாண்டு மாணவர்களின் அரியர் பாடங்களுக்கு தேர்வு நடத்தப்பட வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகள் அறிவித்துள்ளன. இந்த விதிகளைப் பின்பற்றும்படி அனைத்து தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களுக்கும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.  இந்த வழக்குகள், விரைவில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்