
சாலையில் கேட்பாரற்று கிடந்த 50 ஆயிம் ரூபாய் பணத்தை போலீசிடம் ஒப்படைத்த 2-ம் வகுப்பு மாணவனுக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.
ஈரோடு மாவட்டம் கனிராவுத்தர்குளம் பகுதியை சேர்ந்தவர் பாட்ஷா. இவரது மனைவி அப்ரோஸ்பேகம். தம்பதியினரின் மகன் முகமதுயாசின் (7) வீட்டின் அருகே உள்ள அரசுப் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வருகிறான்.
இந்நிலையில் பள்ளிக்கு சென்ற நேரத்தில் முகமதுயாசின் சாலையோரம் பை ஒன்று இருப்பதை பார்த்துள்ளான். அதனை திறந்து பார்த்த போது உள்ளே நிறைய பணம் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளான். இதையடுத்து, அதனை பத்திரமாக எடுத்துச் சென்ற முகமதுயாசின் இது குறித்து தனது ஆசிரியரிடம் கூறி பணத்தை ஒப்படைத்துள்ளான்.
பையை பெற்றுக்கொண்ட ஆசிரியர், சிறுவன் யாசினை அழைத்துக்கொண்டு காவல்நிலையம் சென்று அந்தப் பணப் பையை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்திகணேஷ் வசம் பாதுகாப்பாக ஒப்படைத்தார். பணத்தை பத்திரமாக சேர்க்க உதவிய சிறுவருக்கு காவலர்கள் தங்களது பாராட்டினை தெரிவித்தனர்.