Skip to main content

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் மறைவு; முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்

Published on 28/09/2023 | Edited on 28/09/2023

 

Agricultural Scientist MS Swaminathan passed away Obituary of CM MK Stalin

 

பசுமைப் புரட்சியின் தந்தை என அறியப்பட்டவரும், வேளாண் விஞ்ஞானியுமான எம்.எஸ். சுவாமிநாதன் (வயது 98) வயது மூப்பு காரணமாகச் சென்னையில் இன்று காலை 11.20க்கு காலமானார். இவர் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம், சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சர்வதேச இயற்கை வள பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி உயர் பதவிகளை வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில் இவரது மறைவுக்குத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில், “பசிப்பிணி ஒழிப்பு - உணவுப் பாதுகாப்பு என்ற இரு குறிக்கோள்களுக்காகக் கடந்த முக்கால் நூற்றாண்டு காலம் அரும்பணி ஆற்றி வந்த தலைசிறந்த வேளாண் அறிவியலாளர் எம்.எஸ். சுவாமிநாதன் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன். நீடித்து நிலைத்த உணவுப் பாதுகாப்புக்காக ஆற்றிய பங்களிப்புகளுக்காக பசுமைப் புரட்சியின் தந்தை எனப் பரவலாகப் போற்றப்படும் சுவாமிநாதன் அவர்கள் உலக அரிசி ஆராய்ச்சி நிறுவனம் (IRRI), இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR) முதலிய பல்வேறு பன்னாட்டு மற்றும் அரசு ஆராய்ச்சி நிறுவனங்களின் உயர் பொறுப்புகளில் பணியாற்றிய சிறப்புக்குரியவர் ஆவார். மத்திய வேளாண் அமைச்சகத்தின் முதன்மைச் செயலாளராக இருந்த அவர் பின்னர் மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

 

சமூகத் தலைமைக்கான ராமன் மகசேசே விருது, பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் உள்ளிட்ட பல உயரிய விருதுகளை வென்ற சுவாமிநாதன், இருபதாம் நூற்றாண்டில் மிகப் பெரும் தாக்கம் செலுத்திய ஆசிய ஆளுமைகள் என உலகப் புகழ் பெற்ற ‘டைம்’ இதழ் வெளியிட்ட பட்டியலில் மகாத்மா காந்தி, இரவீந்திரநாத் தாகூர் ஆகியோருடன் இடம்பெற்ற இந்தியர் ஆவார். நாடு போற்றும் விஞ்ஞானியாக சுற்றுச்சூழல், வேளாண்மைத்துறையில் அளப்பரிய பங்காற்றிய சுவாமிநாதன் 1989-91, 1996-2000 ஆகிய ஆண்டுகளில் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது மாநிலத் திட்டக் குழுவிலும்  இடம்பெற்று சீரிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

 

Agricultural Scientist MS Swaminathan passed away Obituary of CM MK Stalin

 

கலைஞர் உடனும், என்னுடனும் எப்போதும் நல்ல நட்பைப் பேணி வந்தார். 1989 ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த கலைஞரிடத்தில் சுவாமிநாதன் கோரிக்கை வைத்ததும், தரமணியில் அவர் நிலம் வழங்கிய இடத்தில்தான் கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அந்நிறுவனத்தின் 32 ஆவது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றி, 96 ஆவது பிறந்தநாள் காணவிருக்கும் சுவாமிநாதன் அவர்கள் நூறாண்டு வாழ்க என வாழ்த்தியது தற்போது என் நெஞ்சில் நிழலாடுகிறது. அவரது இழப்பு அறிவியல் துறைக்கும் தமிழ்நாட்டுக்கும் ஈடு செய்ய இயலாத பேரிழப்பாகும். மிகப்பெரும் ஆளுமையை இழந்து தவிக்கும் அறிவியல் உலகினருக்கும் அவரது குடும்பத்தார்க்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திக் திக் நொடிகள்... சென்னையை கலங்கடித்த சம்பவம்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Tick-tick seconds... a child saved by tact

சென்னை ஆவடியில் நான்காவது மாடியில் இருந்து கீழே தவறிவிழ முற்பட்ட நிலையில் குழந்தை காப்பாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை ஆவடி பகுதியில் வசித்து வரும் வெங்கடேசன்-ரம்யா தம்பதிக்கு 7 மாத குழந்தை உள்ளது. இன்று காலை குழந்தையின் தாய் ரம்யா குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்பொழுது கை தவறி குழந்தை நான்காவது மாடியில் இருந்து இரண்டாவது தளத்தில் உள்ள வெளிப்புற கூரை மீது விழுந்தது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் குழந்தை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொண்டனர். கீழே பெட்ஷீட் போன்றவை விரிக்கப்பட்டு குழந்தை விழுந்தால் பிடிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து திக் திக் நொடிகளை கடந்து அந்த பகுதியை சேர்ந்த ஹரி என்ற இளைஞர் ஒருவர் சாதுர்யமாக செயல்பட்டு குழந்தையை பத்திரமாக மீட்டார். காப்பாற்றப்பட்ட குழந்தையானது உடனடியாக ஆவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Next Story

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு முதல்வர் பாராட்டு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Chief Minister praises Minister Udayanidhi Stalin

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்தத் தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன் ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

Chief Minister praises Minister Udayanidhi Stalin

இதனையடுத்து செஸ் வீரர் குகேஷுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை முகாம் அலுவலகத்தில் இன்று (28.4.2024) பெடே (FIDE) கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூபாய் 75 இலட்சத்திற்கான காசோலை மற்றும் கேடயத்தையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி மற்றும் குகேஷின் பெற்றோர் ஆகியோர் உடனிருந்தனர். 

Chief Minister praises Minister Udayanidhi Stalin

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப்பதிவில், “மிக இளம் வயதில் பெடே (FIDE) கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி தொடரில் வெற்றிவாகை சூடி, அனைவரின் புருவத்தையும் உயர்த்தச் செய்து, தாயகம் திரும்பியுள்ள குகேஷுக்கு 75 லட்ச ரூபாய் உயரிய ஊக்கத்தொகையையும் கேடயத்தையும் அளித்து வாழ்த்தி மகிழ்ந்தேன். கல்வியுடன் சேர்த்து அனைத்து விளையாட்டுகளையும் ஊக்குவித்து, தமிழ்நாட்டில் இருந்து மேலும் பல சாதனையாளர்கள் உருவாக உழைத்து வரும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், அத்துறை அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள். இளைஞர்கள் படிப்புடன், ஏதேனும் ஒரு விளையாட்டையும் தங்கள் அன்றாட வழக்கங்களில் இணைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடலையும் மனதையும் விழிப்புடனும் சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்ள அது உதவும்” எனத் தெரிவித்துள்ளார்.