நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஆப்பிரிக்க பன்றி காய்ச்சலால் பன்றி ஒன்று உயிரிழந்த நிலையில் அந்தப் பகுதியைச் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பண்ணைகள் அமைக்கப்பட்டு பன்றிகள் அதிகமாக வளர்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராசிபுரத்தின் போதமலை அடிவாரப் பகுதியான கல்லாங்குளம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பன்றி பண்ணையில் சில நாட்களுக்கு முன்பு பன்றி ஒன்று இறந்து கிடந்துள்ளது. இதுதொடர்பாக வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், மருத்துவக் குழுவினர் இறந்து கிடந்த பன்றியை கைப்பற்றி அதன் பாகங்களை ஆய்வுக்காக சென்னை ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்திருந்தனர்.
ஆய்வில், பன்றிக்கு ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன் காரணமாக அந்த பண்ணையிலிருந்த 20 பன்றிகளைக் கொல்ல மாவட்ட கால்நடை துறையினர் நடவடிக்கை எடுத்த நிலையில், போதமலை அடிவாரத்தை ஒட்டியுள்ள 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.