Skip to main content

திமுகவின் வெற்றியை தடுக்க அதிமுக ரௌடிகள் மிரட்டல்! தென் மாவட்டங்களில் பதற்றம்..!

Published on 31/03/2021 | Edited on 31/03/2021

 

tiruchendur.jpg

 

தேர்தல் பணி செய்யும் திமுகவினரை அதிமுக ரௌடிகள் மிரட்டுவதாக காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய புகார்கள் தென் மாவட்டங்களில் அதிகரித்துள்ளன.

 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் திமுக சார்பில் போட்டியிடுகிறார் அனிதா ராதாகிருஷ்ணன். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் எம்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். அனிதா ராதாகிருஷ்ணனுக்காக திமுகவினர் கடுமையாக உழைத்து வருகிறார்கள். 

 

மணப்பாடு கிராமத்தைச் சேர்ந்தவரும், திமுகவின் தலைமைச் செயற்குழு உறுப்பினருமான எஸ்.ஜே.ஜெகன் என்பவர், தூத்துக்குடி மாவட்டக் காவல்துறை அதிகாரியிடம் நேற்று (30.03.2021) ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். 

 

அதில், “நான் மணப்பாடு கிராமத்தில் வசித்து வருகிறேன். எனது கட்சி தலைமையின் ஆணைப்படி, அனிதா ராதாகிருஷ்ணனுக்காக தேர்தல் பணியாற்றி வருகிறேன். இதனைப் பொறுத்துக்கொள்ளாத, அதிமுக வேட்பாளர் எம்.ராதாகிருஷ்ணனின் தூண்டுதலில், இப்பகுதியைச் சேர்ந்த பிரபல ரௌடி சுபாஷ் பண்ணையார், 28.3.2021 அன்று இரவு 11.30 மணிக்கு நான் தேர்தல் பணி முடித்து வீட்டுக்கு திரும்பியபோது என்னை தொடர்புகொண்டு, திமுகவுக்கு தேர்தல் வேலை செய்யக்கூடாது என்றும், திருச்செந்தூர் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்றும், மணப்பாடு கிராமத்துக்கு அவர் வரும்போது வரவேற்பு கொடுக்க வேண்டும் என்றும் மிரட்டினார். இதற்கு நான் மறுத்ததால், எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். என்னைப் பற்றி உனக்குத் தெரியுமா, நான் எத்தனை பேரை கொலை செய்திருக்கிறேன் தெரியுமா என்றும் மிரட்டினார். அவர் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார் ஜெகன். 

 

anitha radhakrishnan.jpg

 

விஜய் ரசிகர் மன்றத்தினர் அனைவரையும் திமுகவுக்கு ஆதரவாக திருப்பும் பணிகளை விரைந்து செய்துகொண்டிருந்தார் ஜெகன். இந்த நிலையில்தான் மிரட்டப்பட்டிருக்கிறார். 

 

இதுகுறித்து அனிதா ராதாகிருஷ்ணனிடம் ஜெகன் தெரிவிக்க, அவரது அறிவுறுத்தலின் பேரில் மாவட்டக் காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. திமுகவினரின் வெற்றியைத் தடுக்க அதிமுக ரௌடிகள் இப்படி மிரட்டுவது குறித்து பல புகார்கள் கொடுக்கப்படுவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுக ரௌடிகளால் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் பதற்றம் தொற்றிக்கொண்டிருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்