Skip to main content

தி.மு.க.வின் கபடநாடகம் மக்களிடம் பலிக்காது... -அமைச்சர் சீனிவாசன்

Published on 03/12/2020 | Edited on 03/12/2020

 

ADMK minister dindigul srinivasan speech admk dindigul election booth committee

 

 

தி.மு.க.வின் கபடநாடகம் மக்களிடம் பலிக்காது என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

 

திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சட்டமன்றத் தேர்தலுக்கு பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல்லில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பூத் கமிட்டி அமைப்பது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

 

அதன்பின் அவர், “முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மக்கள் எதிர்பார்த்த மற்றும் எதிர்பாராத பல்வேறு பயனுள்ள திட்டங்களை தந்துள்ளனர். சிறப்பான ஆட்சி மூலம் தமிழ் மக்களின் முழுமையான ஆதரவு நமக்கு உள்ளது. தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. புயல் மழை வெள்ளம் என இயற்கை சீற்றம் நடைபெறும் இடங்களுக்கு முதலமைச்சரே நேரடியாக சென்று களப்பணியில் ஈடுபட்டு வருகிறார். 
 

 

தி.மு.க. நீட் தேர்வு கொண்டுவந்தது; தி.மு.க. அங்கம் வகித்த மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிதான். ஆனால், தற்போது நீட் தேர்வை எதிர்ப்பது போல தி.மு.க.வினர் நடிக்கின்றனர். தி.மு.க.வின் கபடநாடகம் மக்களிடம் பலிக்காது. நீட் தேர்வை ஒருபோதும் நாங்கள் ஆதரிக்க மாட்டோம். அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை முதலமைச்சர் கொண்டுவந்தார். இதன் மூலம் 369 ஏழை, எளிய மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி, அவர்களின் கல்விக் கட்டணத்தை தமிழக அரசே ஏற்று ரூ.17 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. 
 


ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் கோடி ஊழல் செய்த ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை தினந்தோறும் நடந்துவருகிறது. இது போன்று பல்வேறு ஊழல் வழக்குகள் தி.மு.க. மீது உள்ளது. எனவே ஊழலைப் பற்றி பேச தி.மு.க.வுக்கு தகுதி இல்லை. 

 

உடல் உறுப்பு தானம் செய்வதில் தமிழகம் 6-வது முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. நீர் மேலாண்மையில் தமிழகம் சிறப்பான இடத்தில் உள்ளது. இதனால் தமிழக அரசு, மத்திய மந்திரி அமித்ஷாவே பாராட்டினார். இதேபோல், கல்வி, அறிவியல், நிர்வாகம் என அனைத்து துறைகளிலும் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகம் திகழ்கிறது. எனவே, வருகிற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்; எடப்பாடி பழனிசாமி, மீண்டும் முதலமைச்சர் ஆவார். இதற்கு நாம் அனைவரும் தேர்தலில் சிறப்பாக பணியாற்ற வேண்டும்” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்