
திங்கள் கிழமை விநாயகர் சதுர்த்தி ஊரெங்கும் களிமண் விநாயகர் சிலைகள் செய்து கரைப்பதற்கு தயாராகி வருகின்றன. விநாயகர் சிலை வைப்பதும் நீர்நிலைகளில் கரைப்பதும் சிறுவர்களுக்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது. ஊருக்கு ஊர் சின்னசின்ன சிலைகளை சிறுவர்கள் செய்து வைத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே அரசர்குளம் மேல்பாதி கிராமத்தில் கூலித்தொழிலாளி சக்திவேலின் மகன் சின்னக்கருப்பன் (வயது 11). 6 ம் வகுப்பு படிக்கும் சிறுவன். ஊரெல்லாம் விநாயகர் சிலைகள் வைத்திருப்பதைப் பார்த்து தானும் ஒரு களிமண் சிலை செய்து வைத்து அந்த பிள்ளையார் சிலை ஜொலிக்க வேண்டும் என நினைத்துள்ளார்.
இதற்காக அந்த சிறுவர், விநாயகர் சிலை அமைத்து சீரியல் பல்பு போடும் போது திடீரென மின்கசிவு ஏற்பட்டு சிறுவன் தூக்கி வீசப்பட்டார். அதனைத் தொடர்ந்து அந்த சிறுவனை மீட்ட அவரது பெற்றோர், முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது சிறுவன் உயிர் இழந்தார். பிள்ளையார் சிலைக்கு சீரியல் பல்பு போடும்போது ஏற்பட்ட விபரீதத்தில் சிறுவன் உயிரிழந்த சம்பவத்தால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.