Skip to main content

“முதன் முதலில் கலைஞர் என்னை பார்த்து இவ்வாறு அழைத்தபோது ஆச்சரியமாக இருந்தது”- நடிகர் தனுஷ் நெகிழ்ச்சி

Published on 06/01/2024 | Edited on 06/01/2024
actor Dhanush says  It was a surprise when the artist called me this for the first time

திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும், திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ் சினிமாவில் கலைஞரின் பங்களிப்பைப் போற்றும் விதமாக ‘கலைஞர் 100’ விழாவை தமிழ் திரையுலகம் சார்பில் பிரம்மாண்டமாக தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம் என அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து நடத்துகிறது. 

சென்னையில் உள்ள கிண்டி ரேஸ் கோர்ஸ் திறந்தவெளி மைதானத்தில் பிரம்மாண்டமாக இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சாமிநாதன் உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். மேலும் ரஜினி, கமல், சிவராஜ்குமார், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், கார்த்தி, அருண் விஜய், விஜய் ஆண்டனி, நயன்தாரா, வடிவேலு, இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். 

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் தனுஷ், “கலைஞரின் அரசியல் மற்றும் சினிமா சாதனை குறித்து பேச எனக்கு வயதோ, அனுபவமே இல்லை. ஒரு படத்தின் பூஜையின் போது நான் முதல் முதலில் அவரை நேரில் சந்தித்தேன். அப்போது அங்கே வந்திருந்த கலைஞர் என்னை பார்த்து ‘வாங்க மன்மத ராஜா’ என்று கூறி அழைத்தார். நம்முடைய பாடலை இவர் கேட்டுள்ளாரா? என ஆச்சரியமாக இருந்தது. அதை பார்த்து நான் நெகிழ்ச்சி அடைந்தேன். 

ஒரு சிலர் மட்டும் தான் அவர்கள் மறைந்து விட்டார்கள் என்பதை நம்ப முடியாது. கலைஞரை நான் அப்படித்தான் பார்க்கிறேன். யாராவது சொன்னால் தான் அவர் மறைந்து விட்டார் என்று நினைவுக்கு வரும். இப்பவும் அவர் நம் கூட வாழ்ந்து கொண்டிருப்பது போலத்தான் எனக்கு தோன்றுகிறது. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று 2000 ஆண்டுகளுக்கு முன்னால் கலியன் பூங்குன்றனார் சொல்லிருப்பார். ஆனால், நம்முடைய கலைஞர் 2000ல் ‘நான் என்று சொன்னால், உதடுகள் ஒட்டாது நாம் என்று சொன்னால் உதடுகள் கூட ஒட்டும்’ என்று சொன்னார். நாமாக வாழ்வோம் நலமாக வாழ்வோம்” என்று பேசினார். 

சார்ந்த செய்திகள்