
போலீசார் ஆன்லைன் மூலமாக அபராதங்களை தவறாக விதிப்பதை முறைப்படுத்த வேண்டும் என ஈரோடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஈரோடு மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
பின்னர் அவர்கள் பேசுகையில் "கனரக வாகனங்களுக்கு ஆன்லைனில் அபராதங்கள் விதிப்பது தற்போது அதிகரித்து வருகிறது. சாலை ஓரம் பெட்ரோல் பங்குகள் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள், சாலையில் சென்று கொண்டிருக்கும் வாகனங்களின் பதிவு எண்ணை மட்டும் குறித்து வைத்துக் கொண்டு என்ன குற்றம் என்று கூறாமல் ஜெனரல் அஃபென்ஸ் என்று அபராதம் விதிக்கப்படுகின்றது. மேலும், ஒப்பந்த அடிப்படையில் வட மாநிலங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் வாகனங்களுக்கு தமிழகத்தில் அபராதம் விதிக்கப்படுகிறது. சாலை விதிகளை பின்பற்றவில்லை, சீட் பெல்ட் அணியவில்லை, தலைக்கவசம் அணியவில்லை என்றும், மற்றும் முரணான காரணங்களுக்காக அபராதங்கள் விதிக்கப்படுகிறது. எனவே, வாகன உரிமையாளர் வாகனத்திற்கான காலாண்டு வரி, தகுதி சான்றிதழ், பர்மிட்டுகள் பெறுவதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.
இதுபோன்ற ஆன்லைனில் அபராதங்கள் விதிக்கும் முறையை ரத்து செய்து வாகனத்தை நிறுத்தி ஆவணங்கள் உள்ளிட்டவற்றை சரிபார்த்து குற்றம் இருப்பின் அபராதம் விதிக்கலாம். ஓட்டுநர் கையொப்பத்துடன் என்ன குற்றம், ஓட்டுநர் பெயர், ஓட்டுநர் எண்ணையும் ரசீதில் குறிப்பிடலாம். எனவே, இம்மாதிரியான ஆன்லைன் அபராத முறையைக் கைவிட காவல்துறை மறுபரிசீலனை செய்ய வேண்டும். நசிந்து வரும் லாரி தொழிலைக் காக்க வேண்டும். லாரி உரிமையாளர் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட வேண்டும்'' என்றனர்.