Skip to main content

அரிவாள் வாங்குவதற்கும் இனி ஆதார் கார்டு கட்டாயம்!

Published on 30/09/2021 | Edited on 30/09/2021

 

Aadhar card is now mandatory for purchasing scythes

 

தமிழ்நாட்டில் குற்றங்களைத் தடுக்கும் விதமாக ரவுடிகளிடம் நள்ளிரவில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின் பேரில், ரவுடிகளை ஒடுக்க அவர்களின் வீடுகளிலும் தொடர் சோதனை நடைபெற்றுவருகிறது. தமிழ்நாடு முழுவதும் கைதான ரவுடிகளிடமிருந்து 1,110  கத்தி, அரிவாள்கள், 7 துப்பாக்கிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதே போல் தொடர்ந்து டிஜிபி உத்தரவின் பேரில் அனைத்து மாவட்ட எஸ்.பிக்களும் தீவிர ரோந்து பணிகள் உட்பட ரவுடிகளை ஒடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர்.

 

முதல்வரின் ஆலோசனையில் டி.ஜி.பி எடுத்துவரும் பல்வேறு நடவடிக்கைகளையும் பலரும் பாராட்டிவருகின்றனர்.  மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு, “ரவுடிகளை ஒடுக்குவதில் ஜெயலலிதா போலவே ஸ்டாலினும் செயல்படுகிறார்” என செல்லூர் ராஜு தெரிவித்தார். அந்த வகையில் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு சில நாட்களுக்கு முன் மதுரை மற்றும் நெல்லையில் போலீஸ் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் தென்மாவட்டங்களில் குற்றவாளிகள், ரவுடிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். முக்கிய இடங்களில் செக்போஸ்ட் அமைத்து வாகன தணிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார்.

 

இதனைத் தொடர்ந்து, மதுரை மாவட்டத்தில் கத்தி மற்றும் அரிவாள் வாங்க ஆதார் எண் கட்டாயம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் நெல்பேட்டை, ஒத்தக்கடை, வில்லாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கத்தி மற்றும் அரிவாள் கடைகள் உள்ளன. கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை வாங்கும் வாடிக்கையாளர்களின் ஆதார் எண்ணைக் கண்டிப்பாக வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் என கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கடைகளில் கட்டாயம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் கடை உரிமையாளர்களைப் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்