Skip to main content

அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் 47 பேருக்கு பீரோ வாங்கி கொடுத்து அசத்திய கிராம மக்கள்!!

Published on 29/02/2020 | Edited on 29/02/2020

கொத்தமங்கலம் சிதம்பரவிடுதி கிராம மக்கள் அரசு தொடக்கள் பள்ளியில் பருவத் தேர்வுகளிலும் வருகைப் பதிவு அடிப்படையில் 47 மாணவர்களை தேர்வு செய்து பீரோக்களை வழங்கியுள்ள நெகிழ்ச்சி சம்பவம் நடந்தது.

 

47 students from government elementary school bought bureau


புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் சிதம்பரவிடுதி கிராமத்தில் 1973 ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படித்த 3 பேர் மருத்துவர்களாகவும், பலர் பொறியாளர்கள், ஆசிரியர்கள், பலதுறை அதிகாரிகள், தனியார் நிறுவன ஊழியர்களாக உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்துள்ள நிலையில் பள்ளிக்கு அரசு ஆசிரியர்கள் 4 பேருடன் கூடுதலாக பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் சிறப்பு ஆசிரியர்கள், 5 கணினி போன்ற வசதிகளும் உள்ளது. இந்த பள்ளி மாணவர்கள் படிப்பு மட்டுமின்றி அறிவியல் ஆய்வுகள், விளையாட்டு போட்டிகளிலும் மாநில அளவில் சாதித்து வருகின்றனர்.

இந்தநிலையில் சிதம்பரவிடுதி பகுதியில் இருந்து சுமார் 50 மாணவ, மாணவிகள் பல ஊர்களிலும் உள்ள தனியார் பள்ளிகளுக்கு வேன்கள் மூலம் சென்று வருகின்றனர். அதனால் அரசு பள்ளிக்கு மாணவர்களை அழைத்து வரவும் அரசு பள்ளியை தரம் உயர்த்தவும் திட்டமிட்ட முன்னாள் மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், கிராம மக்கள் இணைந்து பள்ளிக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியதுடன் கடந்த 2018 ம் ஆண்டு தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் போல அரசு பள்ளி மாணவ, மாணவிகளும்  பள்ளிக்கும், வீட்டுக்கு சென்று வர கிராம மக்கள், முன்னாள் மாணவர்கள், வெளிநாடு வாழ் இளைஞர்கள் இணைந்து வேன் வாங்கி கொடுத்துள்ளனர்.

மேலும் அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்த மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்கள். அதாவது ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் பாடங்களில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள், வருகை பதிவு, அந்த மாணவர்களின் பெற்றோர்கள் ஒவ்வொரு பெற்றோர் ஆசிர்யர் கழக் கூட்டத்திலும் கலந்து கொள்கிறாரா என்பதை ஆய்வு செய்து மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு 2018 ஆம் ஆண்டு ஒன்று முதல் 5 ம் வகுப்பு வரை 19 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கினார்கள். அதேபோல 2019 ம் ஆண்டு டேபிள் மேட் மாணவர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டது.

அதேபோல இந்த ஆண்டுக்கான ஆண்டுவிழா நேற்று சிதம்பரவிடுதி ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலர் திராவிடச் செல்வம் தலைமையில் ஒன்றியக்குழு தலைவர் வள்ளியம்மை, ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மணிமாறன், செரியலூர் ஜெமின் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் குழ.சண்முகநாதன் ஆகியோர் முன்னிலையில் நடந்த  விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியை சந்திரா வரவேற்றார். 

 

47 students from government elementary school bought bureau


முதல் வகுப்பு மாணவி அகிலாஸ்ரீ ஆண்டறிக்கை வாசித்து அனைவரையும் வியக்க வைத்தார். தொடர்ந்து நடந்த விழாவில் 1 முதல் 5 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களில் பருவத் தேர்வுகள், பள்ளி வருகை பதிவு, பெற்றோர்கள் பள்ளிக்கு வருகை ஆகியவற்றை ஆய்வு செய்து தேர்வு செய்யப்பட்ட 47 மாணவ, மாணவிகளுக்கு நன்கொடையாளர்கள் வழங்கிய பீரோக்கள் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் சதுரங்கப் போட்டியில் மாவட்ட, மாநில அளவில் சாதித்த மாணவர்கள், மற்றும் கல்வி, விளையாட்டு கலைப் போட்டிகளில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் நினைவுப் பரிசுகள் மற்றும் சுழற்கோப்பை பாpசு வழங்கப்பட்டது. 

தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இறுதியில் பள்ளி ஆசிரியர் அருண் நன்றி கூறினார். கிராமத்து அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தி தொடர்ந்து அரசுப் பள்ளியை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்பதற்காக முன்னாள் மாணவர்கள், இளைஞர்கள், பெற்றோர்கள், வெளிநாடு வாழ் தொழிலதிபர்கள் இணைந்து மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி அசத்தி வருவதால் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்வதுடன் மாணவர்களின் கல்வித் திறனும், விளையாட்டு, கலை திறன்களும் வளர்க்கப்பட்டு வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்