தனியார் நிறுவனங்கள் தங்களின் சுயலாபத்திற்காக விளம்பரப் பதாகைகளை சாலை ஓர மரங்களில் ஆணி அடித்து வைப்பதால் பல நூறு ஜீவன்கள் செத்துக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் சுயலாபத்திற்காக சாலை ஓரங்களில் பதாகை வைப்பது மற்றும் மக்கள் கூடும் இடங்கள் நிழல் தரும் மரங்களில் ஆணிகளை அடித்து பதாகைகளை தொங்கவிட்டுச் செல்கின்றனர். இதனால் அந்த நிறுவனங்களுக்கு வருவாய் கிடைக்கலாம் ஆனால் ஆணியால் காயப்படும் மரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக செத்து மடிகிறது வேதனையளிக்கிறது.
இதேபோல, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி - ஆவுடையார்கோயில் சாலையில் ஓரங்களில் உள்ள நெடுஞ்சாலைத்துறையால் பல ஆண்டுகளாக வளர்க்கப்பட்டு வரும் மரங்களில் ஆணிகள் அடித்து விளம்பர பதாகை வைத்துள்ளதால் பல மரங்கள் செத்துக் கொண்டிருக்கிறது. இதே சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏராளமான புளியமரங்களில் ஆணி அடித்து வைக்கப்பட்டிருந்த பதாகைகளால் அப்போதே காய்க்க வேண்டிய மரங்கள் காய்ந்து போய் நின்றது. காய்ந்த மரத்திலும் பதாகைகள் அடிக்கப்பட்டிருந்தது.
அப்போது நாம் படம் எடுத்து வைத்திருந்த 30 வயது மதிக்கத்தக்க ஒரு புளியமரம் இப்போது முற்றிலும் வேர்கள் பட்டுப்போய் சாலை ஓரமாக சாய்ந்து கிடக்கிறது. இப்படியே ஆணி அடிப்பதால் பல நூறு மரங்கள் செத்து மடிவது வேதனையளிக்கிறது. ஆனால், எத்தனை மரங்கள் செத்து சாய்ந்தாலும் கவலையில்லை என்று தொடர்ந்து ஆணி அடித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு கீரலமங்கலம் பகுதியில் மரங்களில் ஆணி அடிப்பதைப் பார்த்த நாம் தமிழர் மற்றும் உள்ளூர் இளைஞர்கள் சம்பந்தப்பட்ட விளம்பர நிறுவனங்களை போனில் அழைத்து வர வைத்து மரங்களில் ஆணி அடித்து வைக்கப்பட்ட பதாகைகளை அவர்கள் கைகளாலேயே அகற்ற வைத்தனர். அதன் பிறகு கீரமங்கலம் பகுதியில் மரங்களில் பதாகை ஆணி அடிப்பது தவிர்க்கப்பட்டுள்ளது. இதேபோல் ஒவ்வொரு ஊரிலும் இளைஞர்கள் செய்தால் மரங்களின் உயிர்களை காப்பாற்றலாம்.