Skip to main content

பொங்கல் திருநாளில் 28 பேர் கைது; சிங்களப்படையின் அத்துமீறல் - அன்புமணி கண்டனம்

Published on 17/01/2024 | Edited on 17/01/2024
28 arrested on Pongal festival; Violation of Sinhalese Army - Anbumani condemned

பொங்கல் திருநாளில் தமிழகத்தை சேர்ந்த 28  மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யபட்டப்பதற்கு பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 28 பேரை 24 மணி நேரத்தில் சிங்களக்கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் கோடியக்கரைக்கு அருகில் இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். பொங்கல் நாள் இரவில் அவர்களை சுற்றிவளைத்து கைது செய்த சிங்களக் கடற்படை அவர்களுக்கு சொந்தமான படகையும் பறிமுதல் செய்திருக்கிறது. அதேபோல், பாம்பன் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 2 படகுகளுடன் மீன் பிடிக்கச் சென்ற 18 மீனவர்களையும் சிங்களக் கடற்படை கைது செய்திருக்கிறது. இரு கைது நடவடிக்கைகளும் இந்திய கடல் எல்லையில் நிகழ்ந்துள்ளன. இலங்கைப் படையின் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த  12 மீனவர்களை சிங்களக் கடற்படை கடந்த 13-ஆம் நாள் கைது செய்திருந்தது. அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று பா.ம.க. அன்றே வலியுறுத்தியிருந்தது. அடுத்த நாள் இது தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதினார். அதே நாளில் கோடியக்கரை அருகில் 10 மீனவர்களும், அடுத்த நாள் கச்சத்தீவு அருகில் 18 மீனவர்களும் கைது செய்யப்பட்டிருப்பதில் இருந்தே தமிழக அரசின் எதிர்ப்பை இலங்கை அரசு பொருட்படுத்தவில்லை என்று தெளிவாகத் தெரிகிறது. பொங்கல் திருநாள் என்றும் பாராமல் தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்வதை மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.

28 arrested on Pongal festival; Violation of Sinhalese Army - Anbumani condemned

இலங்கையின் மீன்பிடி உரிமையில் தமிழக மீனவர்கள் பங்கு கேட்கவில்லை. தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடித்த பகுதிகளில் தொடர்ந்து மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்பது தான் தமிழ்நாட்டின் கோரிக்கை ஆகும். இந்த நியாயமான கோரிக்கைக்குக் கூட  இலங்கை அரசு செவிசாய்க்க மறுக்கிறது. இந்த சிக்கலுக்கு தீர்வு காண வேண்டிய மத்திய அரசும் இந்த சிக்கலை கடந்த பல பத்தாண்டுகளாக வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்கிறது.

வங்கக்கடலில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது அவர்களின் குடும்ப வாழ்வாதாரத்தை பாதிப்பது மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த இந்தியாவின்  பொருளாதாரத்தையும் கடுமையாக பாதிக்கும். இதைக் கருத்தில் கொண்டு இந்த சிக்கலுக்கு தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை மற்றும் தமிழ்நாட்டு மீனவர் அமைப்புகளின் பிரதிநிதிகள், இரு நாட்டு அரசுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கு முன்பாக இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 40 பேரையும், அவர்களின் படகுகளையும் மீட்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.

சார்ந்த செய்திகள்