Skip to main content

நகைக்கடை அதிபர் வீட்டில் 1.50 கிலோ தங்க நகை கொள்ளை...கண் மூடிய நேரத்தில் கைவரிசை காட்டிய பலே ஆசாமிகள்...!

Published on 14/12/2019 | Edited on 14/12/2019

சேலத்தில் பிரபல நகைக்கடை அதிபர் வீட்டில், பாதுகாப்புப் பெட்டகத்தை உடைத்து, 1.50 கிலோ பிளாட்டினம், வைரம், தங்க நகைகள் மற்றும் ரொக்கப்பணத்தை கொள்ளை அடித்துச்சென்ற கொள்ளை கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

 

1.50 kg of gold Theft near Salem

 



சேலம் ஓமலூர் பிரதான சாலையில் குரங்குசாவடி பகுதியில் ஏஎன்எஸ் திவ்யம் ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் பிரபல நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் சீனிவாசன் மகன் ஸ்ரீபாஷ்யம். நகைக்கடை அருகில் சொந்தமாக வீடு கட்டி வசித்து வருகிறார். இந்நிலையில், வியாழக்கிழமை (டிச. 12) இரவு வீட்டில் இருந்த அனைவரும் மாடியில் உள்ள அறையில் படுத்து தூங்கினர். வெள்ளிக்கிழமை (டிச. 13) அதிகாலையில், வீட்டுக்குள் இருந்து மர்ம நபர்கள் இருவர், காம்பவுண்ட் சுவரை தாண்டிக் குதித்து வெளியே வந்தனர். அவர்கள் கையில் சின்னதாக இரண்டு மூட்டைகள் வைத்திருந்தனர். 

வாயில் அருகே பணியில் இருந்த இரவுக் காவலாளி தங்கவேல், அவர்களை பிடிக்க முயன்றார். மர்ம நபர்கள் காவலாளியை தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். தங்கவேல், வயதானவர் என்பதால் மர்ம நபர்களை அவரால் துரத்திப் பிடிக்க முடியவில்லை. என்றாலும், இதுபற்றி ஏனோ அவர், உடனடியாக வீட்டு உரிமையாளரிடம் கூறாமல், அப்படியே தூங்கிவிட்டார். வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் படுக்கையில் இருந்து எழுந்த ஸ்ரீபாஷ்யம், தரை தளத்திற்கு வந்தார். அங்கே, பாதுகாப்பு பெட்டகம் திறந்த நிலையில் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதிலிருந்த 1.50 கிலோ பிளாட்டினம், வைரம், தங்க நகைகள் மற்றும் 6 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை மர்ம கும்பல் கொள்ளை அடித்துச் சென்றிருப்பதை அறிந்த அவரும், குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர். 

இதுகுறித்து சூரமங்கலம் காவல்நிலையத்தில் ஸ்ரீபாஷ்யம் புகார் அளித்தார். மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார், துணை ஆணையர்கள் செந்தில், தங்கதுரை மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை வெள்ளிக்கிழமை காலையில் நேரில் பார்வையிட்டனர். இக்கொள்ளைச் சம்பவம், அதிகாலை 2 மணி முதல் 4 மணிக்குள் நடந்திருக்கலாம் எனத் தெரிகிறது. பாதுகாப்புப் பெட்டகத்தின் மீது வைக்கப்பட்டிருந்த சாவியின் மூலம் பெட்டகத்தைத் திறந்து, நகை, பணத்தை மர்ம நபர்கள் எவ்வித பதற்றமும் இன்றி கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். களவுபோன நகைகள், பணம் ஆகியவற்றின் மொத்த மதிப்பு சுமார் 50 லட்சம் ரூபாய் இருக்கலாம் எனத் தெரிகிறது. 

சம்பவம் நடந்த வீட்டைச் சுற்றிலும் சில இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அந்த கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்து, மர்ம நபர்களை அடையாளம் காணும் பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன. நகைக்கடை உரிமையாளர் ஸ்ரீபாஷ்யம், அன்றாடம் இரவில் தூங்கச் செல்லும் முன், மர்ம நபர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அலாரம் அடிக்கும் வகையில் சுவிட்ச்ஆன் செய்துவிட்டு படுக்கைக்குச் செல்வது வழக்கம். ஆனால், நேற்று அவ்வாறு சுவிட்ச்ஆன் செய்யாமல் தூங்கச் சென்றது குறித்தும், இச்சம்பவத்தில் வீட்டில் உள்ள பணியாளர்களுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பதும் குறித்தும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.

இதுகுறித்து காவல்துறை துணை ஆணையர் செந்தில்குமார் கூறுகையில், ''மர்ம நபர்கள் சம்பவம் நடந்த வீட்டின் பின்பக்க கதவை, இரும்பு கம்பியால் நெம்பி திறந்து உள்ளே புகுந்துள்ளனர். பாதுகாப்பு பெட்டகத்தின் மீதுதான் அதன் சாவி இருந்துள்ளது. அதை எடுத்து திறந்து நகை, பணத்தை கொள்ளை அடித்திருக்கிறார்கள். மோப்ப நாய் மூலம் திருடர்கள் சென்ற பாதை தெரிந்து விடக்கூடாது என்பதற்காக, சம்பவ இடத்தில் மிளகாய் பொடி தூவியிருக்கின்றனர்.

மாடியில் வீட்டு உரிமையாளர் தூங்கிக் கொண்டிருந்த அறைக்கும் மர்ம நபர்கள் சென்று, அங்கிருந்த பீரோக்களிலும் கொள்ளை அடிக்க முயன்றிருப்பது தெரிய வந்துள்ளது. கொள்ளையை முடித்துவிட்டு வீட்டுக்குள் இருந்து அதிகாலை 4.45 மணிக்கு வெளியேறியுள்ளனர். சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, மர்ம நபர்கள் இரண்டு பேர் முகமூடி அணிந்து கொண்டு வீட்டுக்குள் இருந்து காம்பவுண்டு சுவரை தாண்டி குதித்து வெளியேறுவது தெரிய வந்துள்ளது. சில முக்கிய தடயங்கள் கிடைத்துள்ளன. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்,'' என்றார். 
 

 

சார்ந்த செய்திகள்