Skip to main content

128 ஆண்டாக சுயமரியாதைக்காக ஒடுக்கப்பட்ட சாதியினரால் நடத்தப்படும் தேர்திருவிழா

Published on 18/08/2018 | Edited on 18/08/2018
a1


வேலூர் மாவட்டம், ஆம்பூர் நகரம் என்பது இந்து – முஸ்லிம்கள் சரிசமமாக வாழும் பகுதி. இந்துக்கள் கஸ்பா என்கிற பகுதிகளில் தான் நிறைந்து வாழ்ந்து வருகின்றனர். இதில் ஏ கஸ்பா என்பது ஆதிதிராவிடர்களும், பி கஸ்பா என்பது பிறசாதியினர் வாழும் பகுதியாக தற்போது உள்ளது. இதில் ஏ கஸ்பாவில் உள்ள முத்தாலம்மன் கோயில் ஆம்பூரில் பிரபலமானது. இந்த கோயில் சார்பில் வீதியுலா வரும் தேர் கோபுர வடிவத்தில் உயரமாக வித்தியாசமாக இருந்தது.

 

a


அதுப்பற்றி ஊர் நாட்டாமையான அனில்குமாரிடம் கேட்டபோது, இங்குள்ள முத்தாலம்மன் கோயில் நூறாண்டுகள் பழமையானது. தாழ்த்தப்பட்ட சாதி மக்களால் கட்டப்பட்டது. இந்த கோயிலுக்கு பூசாரி என யாரும் கிடையாது. யாரும் உள்ளே சென்று தாங்களே பூஜை செய்துக்கொள்ளலாம். இந்த கோயிலுக்காக 10க்கு 10 அகலத்தில் 60 அடி உயரம் கொண்டதாக உள்ளது இந்த தேர். தமிழகத்தில் இப்படியொரு தேரை நீங்கள் வேறு எங்கும் பார்க்க முடியாது. முழுக்க முழுக்க நாங்களே ஒவ்வொரு திருவிழாவின் போதும் உருவாக்கும் தேர் இது. முக்கிய வீதிகளில் தற்போது வீதியுலா வரும் இந்த தேர் திருவிழாவில் ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த இந்து கடவுளை வணங்குபவர்களும், கிருஸ்த்துவ மதத்தை சேர்ந்தவர்களும் கலந்துகொள்வார்கள். கலந்துகொள்வதோடு தேர் கட்டும் பணியிலும் ஈடுபடுவார்கள். இப்படி ஒடுக்கப்பட்டவர்கள் எந்த மதத்தில் இருந்தாலும் இந்த தேர் உருவாக்கத்திலும், வீதியுலா வருவதிலும் அக்கறை காட்டுவதற்கான காரணம், எங்களின் உரிமை, வலிமையை காட்டுவதற்காக வீதியுலா வருகிறது என்றார்.

 

a


தேர் வீதியுலா வருவதில் என்ன உரிமை, வலிமை என அறிந்துகொள்ள அதன் வரலாறு பற்றி நம்மிடம் பேசிய அப்பகுதியை சேர்ந்த எழுத்தாளர் யாழன்ஆதி, இந்து – முஸ்லிம் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் இந்த நகரத்தில் தான் இந்து மதத்துக்குள் சாதி ஆதிக்கம் காலம் காலமாக இருந்துவருகிறது. 125 வருடங்களுக்கு முன்பு சாதி ஆதிக்கம் நிறைந்த பகுதியாக இந்த ஆம்பூர் இருந்துள்ளது. அப்போது உயர்சாதியினராக தங்களை கருதிக்கொள்பவர்கள் தங்கள் பகுதியில் நடத்தும் திருவிழாக்களில் நடக்கும் உற்சவங்கள், தேர் வீதியுலாக்களில் ஆதிதிராவிட சாதியினரை அனுமதிப்பில்லை, தேரை பார்க்கவும் விடுவதில்லை. அப்போது இரு தரப்புக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

 

am


125 ஆண்டுக்கு முன்பு ஆதிதிராவிடர்கள் சேர்ந்து, நாங்கள் தானே உங்கள் திருவிழாவில் கலந்துக்கொள்ளகூடாது, தேர் வீதியுலாவை பார்க்ககூடாது, எங்களுக்கு நாங்கள் திருவிழா நடத்திக்கொள்கிறோம் என முடிவு செய்தார்கள். அப்போது தேர் செய்வது என்பது கடினமானது, பொருள் செலவு நிறைந்தது. அதனால் வெறும் மூங்கில்களை கொண்ட வித்தியாசமான வடிவமைப்பில் தேரை செய்து நீங்கள் எங்கள் தேரை பாருங்கள் என உயர்சாதியினர் என்பவர்களின் தெருவுக்கும் வீதியுலா நடத்தியுள்ளார்கள். கீழ்சாதிக்காரனின் தேர் ஊருக்குள் வரக்கூடாதென எதிர்த்துள்ளார்கள் உயர்சாதி மக்கள். விடாப்பிடியாக அதனை எதிர்த்து தங்களது உரிமையை நிலைநாட்டி வந்துள்ளார்கள் சாதியால் ஒடுக்கப்பட்ட மக்கள். தற்போது 128வது ஆண்டாக இந்த திருவிழா நடைபெறுகிறது. 


      சுயமரியாதையை சீண்டி பார்த்தால் இதுதான் நடக்கும் என உயர்சாதியினருக்கு நூறாண்டுக்கு முன்பே காட்டியுள்ளார்கள் ஆம்பூர் ஒடுக்கப்பட்ட சாதியினர்.

சார்ந்த செய்திகள்