Skip to main content

“மதுரையின் மேயராக சிறுபான்மை முஸ்லிம் சமூகப் பெண்ணே நியமிக்கப்படுவார்” - பாஜக சரவணன்

Published on 02/02/2022 | Edited on 02/02/2022

 

"A woman from a minority Muslim community will be appointed as the mayor of Madurai" - BJP Saravanan

 

மதுரை பிபிகுளம் பகுதியில் உள்ள மதுரை மாநகர் பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் சரவணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “யூடியூபர் மாரிதாஸை காவல்துறையினர் கைது செய்த வழக்கில் போராட்டம் நடத்தியதற்காக என் மீதும் மற்றும் பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதி, மாரிதாஸ் மீது போடப்பட்ட வழக்கு தள்ளுபடியான நிலையில் இந்த வழக்கும் தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார். 

 

திமுக கற்பனையில் உள்ளது, மக்களுக்கு இந்த பொங்கல் இனிக்கவில்லை, கடந்த அதிமுக ஆட்சியில் 2500 ரூபாய் கொடுத்தார்கள். அதைக் குறை கூறினார்கள். ஆனால், இந்த பொங்கலுக்கு 1000 ரூபாய் கூட கொடுக்கவில்லை. அதனால் உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் திமுகவின் நீல சாயம் வெளுத்துப் போனது என்று கூறுவது போல உறுதியாகிவிடும். 

 

மதுரை மாவட்டத்திலுள்ள 100 வார்டுகளுக்கும் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு பட்டியல் தலைமைக்கு அனுப்பப்பட்டு விட்டது. மதுரையில் அன்னை மீனாட்சி அருளால் இந்தத் தேர்தல் மூலம் ஒரு அதிசயம் நிகழும், பட்ஜெட் குறித்த அனைத்து கேள்விகளுக்கும் நாளை பிரதமர் தொலைக்காட்சி வாயிலாக விளக்கம் கூறுகின்றார்.  அனைத்து தரப்பினருக்கும் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னுரிமை கொடுத்துள்ளோம். மதுரையில் மேயர் மற்றும் துணை மேயர் வேட்பாளருக்கு சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று மதுரையிலிருந்து தலைமையிடம் கேட்டுள்ளோம். நிச்சயமாக சிறுபான்மை முஸ்லிம் பெண்ணே மதுரையின் மேயராக நியமிக்கப்படுவார். 

 

எங்களது வியூகத்தை தற்போது கூற முடியாது. ஆனால் நாங்கள் வெற்றி பெற்ற பின்பு எங்கள் வியூகத்தைப் பற்றி நீங்கள் கேட்பீர்கள். திமுகவில் இருந்தும் எங்கள் கட்சியில் இணைந்து போட்டியிட உள்ளனர். ரோட்டரி கிளப், சமுதாய அமைப்புகளில் இருந்தும் எங்களுடன் இணைந்து போட்டியிட உள்ளனர். இளைஞர் பட்டாளம் பாஜகவிற்கு அதிகம் உள்ளது. 100 வார்டு தான் உள்ளது. ஆனால் 400 பேருக்கு மேல் போட்டியிட தயாராக உள்ளனர்” என்று தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்