திருச்சி மாவட்டம் துறையூரில் நடைபெற்ற பிரம்மாண்ட பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகனை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்தார்.
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “மத்தியில் இருந்து வரக்கூடிய நமக்கு தேவையான திட்டங்களை பெறுவதற்கு, தமிழ்நாட்டுக்கு தேவையான வளர்ச்சி கிடைக்க, தமிழ்நாட்டுக்கு தேவையான நிதி கிடைக்க, சுதந்திரமாக நாடாளுமன்றத்தில் பேசி மக்களுடைய குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும். அதிமுக யாரையும் நம்பாமல் சொந்த காலில் நிற்கிறோம். மத்தியில் திமுக அரசு 17 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்து இதுவரை தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை.
தமிழகம் புயலால் பாதிக்கப்பட்டு அதிமுக ஆட்சியில் இருந்தபோது மக்களுக்கு தேவையான அத்தனை அடிப்படை வசதிகளையும் உடனுக்குடன் செய்து காப்பாற்றியது. ஆனால் தற்போது ஏற்பட்ட சிறிய புயலுக்கே திமுக அரசு மத்திய அரசிடம் இருந்து நிதியை பெறவில்லை. நிதியை முறையாக கேட்டு பெறுவது மாநில அரசின் கடமையாகும். ஒவ்வொரு முறையும் மத்திய அரசை குறை கூறிக்கொண்டு மாநில அரசு முறையாக ஆட்சி செய்யவில்லை.
இந்த ஆட்சியை தமிழகத்திலிருந்து அகற்ற வெகு நாட்கள் இல்லை. அதிமுக விரைவில் ஆட்சியை அமைக்கும். திமுக அரசை ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம். பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ள துறையூர் நகருக்கு அதிமுக அரசு ஆட்சியில் இருந்த போது தான் துறையூரில் இருந்து பெரம்பலூருக்கு செல்ல புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. அதேபோன்று காவிரி கூட்டு குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டது. இதேபோன்று எண்ணற்ற நலத்திட்டங்கள் முசிறி, மண்ணச்சநல்லூர் சமயபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் நிறைவேற்றப்பட்டுள்ளது .
எனவே உங்கள் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க அதிமுக பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற வேண்டும். எனவே அதிமுக வேட்பாளர் சந்திரமோகனுக்கு நமது வெற்றி சின்னமாம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” எனப் பேசினார்.
கூட்டத்தில் அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி, மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதி மற்றும் அதிமுக கூட்டணி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.