
கடந்து சில மாதங்களாக அத்யாவசியப் பொருட்களின் விலைவாசி அதிகரித்து வரும் நிலையில் அதை ஏழை, எளியோர் வாங்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். அதைப் பொருட்படுத்தாமல் இயங்கும் மத்திய மற்றும் மாநில அரசைக் கண்டிக்கும் விதமாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டது.
அதில் தெரிவிப்பதாவது, “மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளில் முக்கியமானது வெங்காயம். வெங்காயம் உணவுப்பொருள் மட்டுமின்றி, மக்கள் ஆரோக்கியமாக வாழ நல்ல அருமந்தாகவும் திகழ்கிறது. அந்த வெங்காயத்தின் விலை இன்று வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து, ஏழை, எளிய மக்களுக்கு எட்டா கனியாகிவிட்டது.கடந்த சில வாரங்களாக ரூ.100, ரூ.110, ரூ.120 என அதிகரித்து இன்று, ரூ. 150க்கும் மேலாக உயர்ந்துவிட்டது வெங்காயத்தின் விலை.
இதன் காரணமாக, பொதுமக்கள் பலர் குறைந்த அளவே வெங்காயத்தை வாங்குகின்றனர். ஏழை, எளிய மக்கள், வெங்காயம் வாங்குவதையே தவிர்த்து விட்டனர்.இப்பிரச்சினைகள் குறித்து எதுவும் கவலைப்படாமல், செவிடன் காதில் சங்கு ஊதியது போன்று, மீண்டும் முதலமைச்சராவதற்கான பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி.வெங்காய விலையைக் குறைக்க பல்வேறு மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், ‘வெற்றிநடை போடும் தமிழகம்’ என பொய் விளம்பரம் கொடுப்பதில் முதன்மை மாநில அரசாக அதிமுக அரசு விளங்குகிறது என்பதுதான் உண்மை.
இது தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்த்தால், அவர்கள் அனைத்து துறைகளையும் தனியார்மயமாக்குவதில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். அவர்களிடத்தில் வெங்காய விலை உயர்வு குறித்து கேட்டால், நான் வெங்காயம், பூண்டு சாப்பிடுவது இல்லை என்றுதான் கூறுவார்கள்.ஏனென்றால், “நான் வெங்காயம், பூண்டு சாப்பிடுவது இல்லை” என்று நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியவர்தான். அவர் உப்பு போட்டுக்கூட சாப்பிட மாட்டார். அது அவரது வழக்கம். ஆனால், மக்கள் அப்படியில்லை. மக்களின் வயிற்றில் கை வைக்கும் இந்த விலைவாசி உயர்வு குறித்து மத்திய, மாநில அரசுகளுக்குச் சிறிதும் அக்கறை இல்லை என்பதற்கு, எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கையும், நிர்மலா சீதாராமனின் பேச்சுமே உதாரணம்.
தங்கம், வெள்ளி போன்று, நாளுக்கு நாள் காய்கறி விலை உயர்ந்து வரும் நிலையில், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனப்போக்கு காட்டி வரும் எடப்பாடி பழனிசாமி அரசை தூக்கி எரிய மக்கள் தயாராகி விட்டனர் என்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் நினைவுப்படுத்துகிறேன். எனவே, வெங்காயம் மட்டுமல்ல, பூண்டு, கறிவேப்பிலை உள்ளிட்ட காய்கறி விலை உயர்வுகள் குறித்து, உணவுப் பொருட்கள் எவ்விதத் தடையும் இன்றி நியாய விலையிலும் கிடைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது” என தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)