Skip to main content

அதிமுகவோடு அட்ஜெஸ்ட்மெண்ட்! திமுகவில் டம்மி வேட்பாளர்கள்!- அதிருப்தியில் திமுக தலைமை!

Published on 24/12/2019 | Edited on 24/12/2019

“உள்ளாட்சி தேர்தல் களத்தில் ஆளும் கட்சியான அதிமுகவுக்கு எதிராக எந்த அளவுக்கு திமுக வரிந்துகட்டி நிற்கிறது தெரியுமா?” என்று கேட்ட அந்த விருதுநகர் மாவட்ட உடன்பிறப்பு, “தாங்கவே முடியாத மனவேதனையில் இருக்கிறோம்..” என்று கூறியதெல்லாம், ‘ஆமாங்க.. அப்படித்தான் நடந்துக்கிட்டிருக்கு.. நாங்க என்ன பண்ண முடியும்?’ என்று அக்கட்சியினரே ஒத்துக்கொள்ளக் கூடிய, விவகாரமான அரசியலாக இருக்கிறது. 


“தமிழகம் முழுவதும் எப்படியோ? விருதுநகர் மாவட்ட திமுகவின் செயல்பாடு  ஒரு மாதிரியாகவே இருக்கிறது. உதாரணத்துக்கு சிவகாசி ஒன்றியம்!”என்று உ.பி.க்கள் இருவர், தங்களின் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தனர்.“சிவகாசி ஊராட்சி ஒன்றிய 28- வது வார்டில் 5000 ஓட்டு கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடுகிறார் திமுக வேட்பாளர் பிரேமா. இவருடைய கணவர் குமார் மளிகைக்கடை நடத்துகிறார். பிரேமா குடும்பத்துக்கும் திமுகவுக்கும் என்ன சம்பந்தம்? கட்சியின் பெயரைக் கூட சொல்ல மாட்டார் குமார்.‘கருணாநிதி கட்சி’என்றுதான் பொது இடத்திலும் பேசுவார்.  

VIRUDHUNAGAR DISTRICT LOCAL BODY ELECTION ADMK AND DMK PARTIES ADJUSTMENT



விருதுநகர் மாவட்ட ஊராட்சி குழு (50000 ஓட்டு) 6- வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறார் திமுக வேட்பாளர் சுந்தரேஸ்வரி. இவர், விளாம்பட்டியிலுள்ள ஏ.வி.எம்.மாரிமுத்து நாடார் மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராகப் பணிபுரிகிறார். இவருடைய கணவர் ரத்தினம், வெங்காய வியாபாரம் செய்து வருகிறார். ஒரு எம்.எல்.ஏ. பெற வேண்டிய வாக்குகளில் முன்றில் ஒரு பங்கு வாக்குகளைக் கவர வேண்டிய சுந்தரேஸ்வரி, இன்று வரையிலும் விடுப்பு எடுக்காமல் பள்ளி சென்று வருகிறார். அவருடைய கணவர் ரத்தினமோ, செய்யும் தொழிலே தெய்வம் என வெங்காய வியாபாரத்தை கண்ணும் கருத்துமாகப் பார்த்து வருகிறார். 

VIRUDHUNAGAR DISTRICT LOCAL BODY ELECTION ADMK AND DMK PARTIES ADJUSTMENT


இவர்களுக்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம்? சுந்தரேஸ்வரியால் எப்படி திமுக வேட்பாளராக முடிந்தது? இதே சிவகாசி ஒன்றியத்தில், அதிமுக சார்பில் விருதுநகர் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு நர்மதாவும், 27- வது வார்டு உறுப்பினர் பதவிக்கு மாலையம்மாளும் போட்டியிடுகின்றனர். இருவருக்குமே, கட்சியின் சின்னம் இரட்டை இலை என்பதால், நோட்டீஸிலும், போஸ்டரிலும் இணைந்தே காணப்படுகிறார்கள். வாக்கு சேகரிப்பதிலும் ஒற்றுமையுடன் வலம் வருகின்றனர். 

VIRUDHUNAGAR DISTRICT LOCAL BODY ELECTION ADMK AND DMK PARTIES ADJUSTMENT


திமுகவிலோ, சிவகாசி ஒன்றியத்திலுள்ள இரண்டு பதவிகளுக்கும் ஒரே உதய சூரியன் சின்னம் என்றாலும், தனித்தனியாக பிரிந்துள்ளனர். வாக்காளர்களைச் சந்திப்பதில் இன்று வரையிலும் இவ்விருவரும் போதிய ஆர்வம் காட்டாமல் இருப்பதால், அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வதற்காகவே களத்தில் இறக்கிவிடப்பட்ட டம்மி வேட்பாளர்கள் என்றே பேசப்படுகின்றனர். நிலைமை இப்படி இருந்தால், இவர்களுக்காக  உள்ளூர் திமுகவினர் எப்படி ஓட்டு கேட்பார்கள்? இதே ரீதியில், தேர்தலுக்குத் தேர்தல் கட்சி தேய்ந்துகொண்டே போனதால், கடந்த 30 வருடங்களாக சிவகாசி தொகுதியில் திமுகவால் போட்டியிட முடியவில்லை. இந்தத் தொகுதியிலிருந்து யாரையும் திமுக எம்.எல்.ஏ.வாக அனுப்பவும் இயலவில்லை. 
 

சிவகாசி ஒன்றிய திமுகவில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள், ஊரைச் சுற்றி மது பார்களும், சீட்டு கிளப்புகளும் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு அதிமுக அரசாங்கத்தின் தயவு தேவையோ தேவை. ஒருவேளை திமுக வெற்றிபெற்று சிவகாசி ஒன்றியத்தைக் கைப்பற்றினாலும், ஒன்றிய பொறுப்பில் உள்ள திமுக நிர்வாகிகள், தாங்கள் நடத்திவரும் தொழிலுக்காக, அதிமுக ஆட்சியாளர்களையும், குறிப்பாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியையும் அனுசரித்தே செல்ல வேண்டும். இந்த சுயநலம்தான், அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறட்டும் என்ற உள்நோக்கத்தோடு, திமுகவில் டம்மி வேட்பாளர்களை நிறுத்த வைத்திருக்கிறது.” என்றனர் குமுறலோடு.  

VIRUDHUNAGAR DISTRICT LOCAL BODY ELECTION ADMK AND DMK PARTIES ADJUSTMENT



சிவகாசி ஒன்றிய திமுகவினரின் ஆதங்கத்தை விருதுநகர் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். கவனத்துக்குக் கொண்டு சென்றோம். “அப்படியெல்லாம் கிடையாது. சிவகாசி ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றால், வனம் எப்படி சேர்மன் ஆக முடியும்? சிவகாசி ஒன்றியத்துக்கு திமுக சேர்மன்தான் என்று வனம் அடித்துச் சொல்லியிருக்கிறார். எல்லாவற்றையும் வனம் பார்த்துக்கொள்வார். நான் பிரச்சாரத்தில் பிசியாக இருக்கிறேன்.” என்று முடித்துக்கொண்டார். 
 

அண்ணாச்சி, வனம் என்று குறிப்பிடுவது திமுக மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் வனராஜைத்தான். வனராஜ் மகன் விவேகன்ராஜ், சிவகாசி திமுக ஒன்றிய செயலாளராக இருக்கிறார். குடும்பத்தினரை மட்டுமல்ல, தன்னுடைய மது பாரில் வேலை பார்ப்பவரைக் கூட, உள்ளாட்சி தேர்தல் களத்தில் வேட்பாளர்கள் ஆக்கியிருக்கிறார் வனராஜ் என்று லோக்கல் திமுகவினர் புகார் வாசிக்கின்றனர். சிவகாசி ஒன்றியத்துக்கு பொறுப்பாளராக உள்ள கே.கே.எஸ்.எஸ்.ஆரோ, வனராஜ் குடும்பத்தைத்தான் மலை போல நம்பியிருக்கிறார்.  

VIRUDHUNAGAR DISTRICT LOCAL BODY ELECTION ADMK AND DMK PARTIES ADJUSTMENT


இதே சிவகாசி ஒன்றியத்தில், தங்கள் கட்சியின் வேட்பாளர்கள் நர்மதா மற்றும் மாலையம்மாளுக்காக விருதுநகர் மாவட்ட செயலாளர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, ஆட்சி அதிகார பலத்தை மிரட்டலாக எடுத்துச்சொல்லி, முழு வீச்சில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் செல்லும்போது, அன்றிரவு அங்கேயே தங்கியிருந்து, கவனிப்பு வேலைகள் குறித்த உத்தரவைப் பிறப்பித்தபடியே இருக்கிறார். ஆளும் கட்சி அசுர பலம் காட்டி வருவதைக் கண்டு சுதாரித்து, விருதுநகர் மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் திமுக வேகம் காட்டுமா? வேடிக்கை பார்க்குமா? என்பதை, தேர்தல் முடிவுகள் தெரிவித்துவிடும். 



 

சார்ந்த செய்திகள்