Skip to main content

சிபிஐ அலுவலகத்தில் விஜயபாஸ்கர் ஆஜராக உத்தரவிட்டதன் பின்னணி!

Published on 15/12/2018 | Edited on 15/12/2018
sasikala



குட்கா ஊழல் தொடர்பாக முன்னாள் டிஜிபி அசோக் குமார் தலைமைச் செயலாளருக்கு எழுதிய கடிதம் ஒன்று காணவில்லை என இப்போது இருக்கும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மதுரை கோர்ட்டில் தெரிவித்திருந்தார். 
 

ஆனால் வருமான வரித்துறையினரின் சோதனையின்போது போயஸ் கார்டனில் அந்தக் கடிதம் கண்டுபிடிக்கப்பட்டது.
 

 மேலும் ஓ.பி.எஸ்., நத்தம் விசுவநாதன் ஆகியோரிடமிருந்து ஜெயலலிதா கைப்பற்றி வைத்திருந்த சொத்து விவர பட்டியலும் கண்டுபிடிக்கப்பட்டது.
 

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் இருக்கும் சசிகலாவிடம் வருமானவரித்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது குட்கா ஊழல் பற்றிய கேள்விகளையும் கேட்டுள்ளனர்.
 

சொத்துக்கள், வருமானம் பற்றிய கேள்விகளுக்கும், குட்கா ஊழல் பற்றிய கேள்விகளுக்கும் பதிலளித்த சசிகலா, எல்லாமே ஜெயலலிதாவுக்குத்தான் தெரியும். அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் ஜெயலலிதாவுக்குச் சொந்தமானது எனக் கூறியுள்ளார்.
 

இதனிடையே சென்னை சிபிஐ அலுவலகத்தில் குட்கா ஊழல் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன் ஆஜரானபோது குட்கா ஊழல் தொடர்பாக சசிகலாவுக்கு தெரியும், அவருக்கும் தொடர்பு உள்ளது என கூறியிருக்கிறார்.
 

விஜயபாஸ்கரின் உதவியாளர் அளித்த இந்த தகவல் சசிகலாவிடம் விசாரணை செய்யும் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. சரவணன் சொன்ன தகவலை வைத்தும் சசிகலாவிடம் விசாரணை நடத்தயுள்ளனர்.
 

இதன் எதிரொலியாகத்தான், சனிக்கிழமை சிபிஐ அலுவலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரை ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

 

விஜயபாஸ்கர் ஆஜராவாரே தவிர அவர் மீது கைது நடவடிக்கை உட்பட எந்த நடவடிக்கையும் இருக்காது எனவும், சிபிஐ தரப்பில் பேசப்பட்டு விட்டது எனவும், அதிமுக வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.


கடந்த அதிமுக ஆட்சியின்போது வணிகவரித்துறை அமைச்சராக இருந்த ரமணாவுக்கும் குட்கா ஊழலில் தொடர்பு இருப்பதாக மாதவராவ் வாக்குமூலம் அளித்திருந்தார். அதை தொடர்ந்து, அவரது வீட்டிலும் சோதனை நடந்தது. இதனால் ரமணாவும் இன்று பிற்பகலில் சிபிஐ அதிகாரிகள் முன்பு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்