Skip to main content

'வீராணம் சுரங்கத் திட்டத்தை அனுமதிக்கக் கூடாது'-பாமக அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Published on 29/01/2023 | Edited on 29/01/2023

 

Veeranam mining project should not be allowed-Pmk Anbumani Ramadoss insists

 

'என்.எல்.சி நிறுவனத்தின் பழுப்பு நிலக்கரி சுரங்க விரிவாக்கத் திட்டங்களை கைவிட வேண்டும் என்று கடலூர் மாவட்ட மக்கள் போராடி வரும் நிலையில், அடுத்த கட்டமாக வீராணம் ஏரியை சுற்றியுள்ள  12 கிராமங்களில் நிலக்கரி வளங்களை மதிப்பிடும் பணியை மத்திய சுரங்கத்துறை மேற்கொண்டு வருகிறது' என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள உழவர்களின் வாழ்வாதாரம், தமிழ்நாட்டின் உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றைப் பற்றி கவலைப் படாமல் காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விளைநிலங்களை பறித்து நிலக்கரி சுரங்கங்களை அமைக்க மத்திய சுரங்கத்துறை துடிப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.

 

கடலூர் மாவட்டத்தில் வீராணம் ஏரியை சுற்றியுள்ள சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் ஆகிய 3 வட்டங்களில் உள்ள  புத்தூர், ஆட்கொண்டநத்தம், மோவூர், ஓமம்புலியூர், தவர்த்தாம்பட்டு உள்ளிட்ட 12 கிராமங்களில் மிக அதிக அளவில் நிலக்கரி வளம் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.

 

வீராணம் பகுதியில் உள்ள நிலக்கரி வளத்தின் துல்லியமான அளவு என்ன? அவற்றின் வெப்பத்திறன் என்ன? என்பதை கண்டறியும் பணியில் எம்.இ.சி.எல். எனப்படும் தாதுவளம் கண்டுபிடிப்பு மற்றும் ஆலோசனை நிறுவனத்தை (MINERAL EXPLORATION AND CONSULTANCY LTD) மத்திய அரசின் சுரங்கத்துறை ஈடுபடுத்தியுள்ளது. 200 இடங்களில் மண் மற்றும் நீர் ஆய்வுகள் தொடங்கப் பட்டுள்ளன. இதற்கு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், உழவர்கள் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, ஆய்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவை எந்த நேரமும் மீண்டும் தொடங்கப்படலாம்; ஆய்வு முடிவடைந்த பின்னர் அப்பகுதியில் என்.எல்.சியின் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கப்படலாம் என்று உழவர்கள் அஞ்சுகின்றனர்.

 

வீராணம் பகுதியில் மட்டும் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கப்பட்டால், அது ஒட்டுமொத்த கடலூர் மாவட்டத்தை மட்டுமின்றி, அருகிலுள்ள அரியலூர் மாவட்டத்தையும் அழிப்பதற்கு சமமான செயலாகும். வீராணம் ஏரி பகுதியை ஒட்டியுள்ள சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் ஆகிய வட்டங்கள் வளம் கொழிக்கும் பூமி ஆகும். இந்த 3 வட்டங்களிலும் 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த பகுதிகளில் 2 லட்சத்திற்கும் கூடுதலான குடும்பங்கள் வேளாண்மையை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கின்றன. வீராணம் நிலக்கரி சுரங்கம் அமைக்கப்பட்டால், அதற்காக கையகப்படுத்தப்படும் நிலங்கள் மட்டுமின்றி, 25 கி.மீ சுற்றளவில் உள்ள நிலங்களும் அவற்றின் வளத்தை இழந்து மலடாகி விடும். அதனால், அப்பகுதியில் உள்ள 2 லட்சம் குடும்பங்களும் வாழ்வாதாரங்களை இழப்பது மட்டுமின்றி, வீடுகளையும் இழந்து அகதிகளாக வெளியேற வேண்டிய அவலநிலை ஏற்படும்.

 

காவிரி டெல்டாவின் நிறைவுப் பகுதியாக வீராணம் பாசனப் பகுதி அமைந்திருக்கிறது. வளமான இந்த பகுதி ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட தொழில்துறை திட்டங்களால் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பதற்காகத் தான் பாட்டாளி மக்கள் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தி இந்தப் பகுதிகளை காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கச் செய்தது. இந்தப் பகுதியில் வேளாண்மையை பாதிக்கும் எந்தத் திட்டங்களையும் செயல்படுத்தக் கூடாது என்பது விதி. அவ்வாறு  இருக்கும்போது, நிலக்கரி வளம் குறித்த ஆய்வை மேற்கொள்வதற்கான அதிகாரம் எவ்வாறு வழங்கப்பட்டது என்பது பற்றி கடலூர் மாவட்ட நிர்வாகம், அம்மாவட்ட மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

 

என்.எல்.சி. நிறுவனம் அதன் விரிவாக்கத் திட்டங்களுக்காக சுமார் 25,000 ஏக்கர் வேளாண் விளைநிலங்களை கையகப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறது. என்.எல்.சியின் நிலப்பறிப்பு முயற்சிகளுக்கு கடலூர் மாவட்ட நிர்வாகம் அப்பட்டமாக துணை போய்க்கொண்டிருக்கிறது. அதை எதிர்த்து மக்களையும், உழவர்களையும் திரட்டி பாட்டாளி மக்கள் கட்சி தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. மக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டிய தமிழ்நாடு அரசு, அதற்கு மாறாக கடலூர் மாவட்டத்தின் வளம் கொழிக்கும் தென் பகுதியையும் சீரழிக்கும் திட்டத்திற்காக ஆய்வு நடத்த அனுமதி அளித்திருக்கிறது. கடலூர் மாவட்ட மக்களின் நலன், வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழலை தமிழ்நாடு அரசு மதிக்கவில்லை, அவற்றில் அரசுக்கு அக்கறையில்லை என்பதையே இவை காட்டுகின்றன.

 

உழவையும், உழவர்கள் நலனையும் பறிகொடுத்து விட்டு, எந்தத் தொழில்திட்டங்களையும் செயல்படுத்தத் தேவையில்லை. அதிலும் குறிப்பாக, சுற்றுச்சூழலைக் கெடுக்கும் நிலக்கரி சுரங்கத் திட்டத்திற்காக  விளைநிலங்களை பறிப்பதையும், பலி கொடுப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, வீராணம் நிலக்கரி சுரங்கத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். வீராணம் சுரங்கத் திட்டத்திற்காக எந்தவிதமான ஆய்வுகளையும் காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நடத்த அனுமதிக்கக் கூடாது. இதற்காக எம்.இ.சி.எல் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட அனுமதியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால், மக்களைத் திரட்டி மாபெரும் அறப்போராட்டத்தை பா.ம.க. நடத்தும்' என தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு; ராமதாஸ் கண்டனம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Ramdas said mixing of cow dung in the drinking water tank of Sangamviduthi panchayat is reprehensible

சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்  அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில்  மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றது மட்டுமின்றி, மனிதத் தன்மையற்ற செயலாகும்.  இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. அத்தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டியில் இது போன்ற மிருகத்தனமான செயல்கள் நடப்பதைக் கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா?  என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் பணி. ஆனால், இந்த இரு கடமைகளிலும் திராவிட மாடல் அரசு தோல்வியடைந்து விட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. அதிலும் குறிப்பாக பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் 17 மாதங்களாகி விட்டன. ஆனால்,  அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் இத்தகைய கொடுமைகள் மீண்டும், மீண்டும் நிகழ்வதற்கு காரணம் ஆகும். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல்  குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

“புதிய பேருந்துகளை அரசு வாங்க வேண்டும்” - அன்புமணி ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani Ramadoss says Government should buy new buses

புதிய அரசு பேருந்துகளையும், தமிழக அரசு வாங்க வேண்டும் என்றும், பழைய பேருந்துகளைப் பராமரிக்க, உதிரி பாகங்களை வாங்க அரசு போதிய நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே. நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துனர் அமர்ந்திருந்த கடைசியில் இருந்து மூன்றாவது இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துனரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர் லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார். அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே திருச்சியில் பேருந்தின் இருக்கை கழன்று நடத்துநர் தூக்கி வீசப்பட்டுள்ளார். பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதைத்  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே ஒப்புக் கொண்டிருக்கிறார். 15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் 12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும், அவற்றைப் பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாதது தான் இத்தகைய அவல நிலை ஏற்படுவதற்கு காரணம் ஆகும். இத்தகைய அவல நிலைக்கு தி.மு.க தலைமையிலான திராவிட மாடல் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள் கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள் ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள் வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும் பேருந்துகள் மட்டும் 15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும். பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும், உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.