Skip to main content

'சிங்களக் கடற்படையினரின் அத்துமீறலை ஏற்றுக் கொள்ள முடியாது'- ராமதாஸ் கண்டனம்

Published on 04/02/2024 | Edited on 04/02/2024
 'The transgression of the Sinhalese Navy cannot be accepted'- Ramadoss condemned

தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையால் கைது செய்யயப்படும் நிகழ்வுகள் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 23 பேரை கச்சத்தீவு அருகே  சிங்களக் கடற்படையினர் கைது செய்திருக்கின்றனர். அவர்களின் இரு மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கச்சத்தீவையொட்டிய இந்திய கடல் எல்லையில்  அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது சிங்களக் கடற்படையினர் அத்துமீறி நுழைந்து கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

கடந்த மாதத்தில் மட்டும் நாற்பதுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்திருக்கிறது.  அவர்களில் பலர் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டு விட்ட நிலையில் 18 மீனவர்கள் மூன்று நாட்களுக்கு முன்னர் தான் விடுதலை செய்யப்பட்டனர். அதற்குள்ளாகவே  மேலும்  23 மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.  தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களை பறிக்க வேண்டும் என்பதற்காகவே  அவர்களை சிங்களப்படை  தொடர்ந்து கைது செய்து வருகிறது. இதற்கு மத்திய அரசு முடிவு கட்ட வேண்டும்.

இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான கடற்பரப்பு மிகவும் குறுகியது. அதனால் தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள்ளும் நுழைவதை தவிர்க்க முடியாது. அதனால் தமிழக மீனவர்களும், இந்திய மீனவர்களும் காலம் காலமாக எந்தெந்த பகுதிகளில் மீன் பிடித்து வந்தார்களோ, அதே பகுதியில் தொடர்ந்து மீன்பிடிக்க அனுமதிப்பது தான் சரியானதாகும்.

இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரத்திற்கு தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக தமிழக மீனவர்கள், இலங்கை மீனவர்கள், தமிழக அரசு, இலங்கை அரசு ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுக்களுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்