தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் சீலையம்பட்டி, கோட்டூர், தர்மாபுரி உள்ளிட்டப் பகுதிகளில் வாக்குச் சேகரித்தார்.
அப்போது அவர் கூறியதாவது; "எந்த கொம்பாதி கொம்பனாலும் அசைக்க முடியாத எஃகு கோட்டையாக அ.தி.மு.க.வை ஜெயலலிதா உருவாக்கியுள்ளார். ஜெயலலிதா கூறியது போல், 2023- ஆம் ஆண்டுக்குள் வீடு இல்லாத ஏழை மக்களுக்கு வீடு கட்டிக்கொடுக்கப்படும். தாலிக்கு தங்கம் போன்ற பல திட்டங்கள் தற்போது உயர்த்தி வழங்கப்பட்டு வருகின்றன. திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ், பட்டதாரி பெண்களுக்கு ரூபாய் 60,000, பட்டதாரி அல்லாத பெண்களுக்கு ரூபாய் 35,000 ஆக உயர்த்தப்படும். அரிசி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ஆண்டிற்கு 6 விலையில்லா சமையல் எரிவாயு சிலிண்டர்கள் உறுதியாக வழங்கப்படும்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் சுற்றுவேலி போடப்பட்டு நிலம் சமப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. பார்த்து பார்த்து மக்கள் நலத்திட்டங்களை அறிவிக்கும் அரசு அ.தி.மு.க. அரசு. அரசு வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கை ஒதுக்கி கல்வி புரட்சிக்கு வித்திட்டவர் ஜெயலலிதா. கோட்டூரில் அடுத்தாண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும்; இளம் வயதில் ஜல்லிக்கட்டில் பங்கேற்று காளைகளை அடக்கியுள்ளேன். தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும்." எனத் தெரிவித்தார்.
இதனிடையே, தேர்தல் பிரச்சாரத்தின் போது டீ கடை ஒன்றில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேநீர் அருந்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.