பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசால் கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் (C.A.A.) கொண்டுவரப்பட்டது. அதில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.
அதாவது இந்த சட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க சி.ஏ.ஏ. வகை செய்கிறது. அதே சமயம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் இஸ்லாமிய மக்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படவில்லை. மேலும் தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவும் சிஏஏ சட்டத்தில் வழிவகை செய்யப்படாததும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி இருந்தார். இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் நேற்று முன்தினம் முதல் (11.03.2024) அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது.
மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு, பல்வேறு எதிர்க்கட்சிகள், தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், சி.ஏ.ஏ சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதனையொட்டி, செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய திருமாவளவன், “இந்த சட்டத்திற்கு இந்தியா முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகள் கடும் எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்கள். அந்த எதிர்ப்பை எதிர்கொள்ள இயலாத காரணத்தில் கடந்த 3 ஆண்டுகளாக் அச்சட்டத்தை கிடப்பில் போட்டு வைத்திருந்தார்கள். தேர்தல் நேரத்தில் இஸ்லாமியர்களுக்கும், இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இப்போது அதை அமல்படுத்திருக்கிறார்கள். இதன் மூலம் பெரும்பான்மைவாத அரசியலை முன்னெடுக்க முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
இதனை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், வரும் மார்ச் 15ஆம் தேதி அன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். பா.ஜ.க.வினர் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும் சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டாலும் அவர்கள் சென்றதேயில்லை. மணிப்பூரில் நாள்தோறும் பற்றி எரிந்துக் கொண்டிருக்கிறது. ஆனால், பிரதமரோ, உள்துறை அமைச்சரோ அங்கு சென்று பார்க்கவேயில்லை. ஆனால், தேர்தல் நேரத்தில் ஒரே மாநிலத்தில் திரும்ப திரும்ப வருகிற நிலையை நாம் பார்க்கிறோம். அவர்கள் எவ்வளவு சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் என்பதை நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் நலனை விட தங்கள் அரசியல் ஆதாயம் தான் முக்கியம் என்று கருதக்கூடியவர்கள். அதனால், இந்தியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிப்பது அவசியம். சனாதன சக்திக்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்” என்று கூறினார்.