Skip to main content

திருச்சியில் பொதுக்கூட்டம்; தமிழகம் முழுவதும் தொடர் பிரச்சாரம் செய்கிறார் முதல்வர்

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Tamil Nadu Chief Minister Stalin starts election campaign in Trichy today

நாட்டின் 18 ஆவது மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடக்கிறது. முதற்கட்ட தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த மாதம் ( ஏப்ரல்) 19 ஆம் ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 20 ஆம் தேதி தொடங்கியது. தமிழகத்தில் தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் விறுவிறுப்பாக ஈடுபட்டுள்ளன. இந்த தேர்தலில் தி.மு.க. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒரு அணியாகவும், அ.தி.மு.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் மற்றொரு அணியாகவும், பா.ஜ.க., பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் 3 ஆவது அணியாகவும் போட்டியிடுகின்றன.

நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது. கட்சிகளின் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் இறுதிக் கட்டத்தை அடைந்து வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. தி.மு.க. சார்பில் போட்டியிடும் 21 வேட்பாளர்கள் பட்டியலை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வெள்ளிக்கிழமை திருச்சியில் தேர்தல் பிரச்சாரம் தொடங்குகிறார் முதல்வர். இதற்கான பொதுக்கூட்ட மேடை திருச்சி மாவட்டம் சிறுகனூரில் அமைக்கப்பட்டு வருகிறது. அங்கு மாலை 5 மணிக்கு நடக்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அருண் நேரு, திருச்சி பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோ உள்ளிட்டோரை அறிமுகம் செய்து வைத்து வாக்குகள் சேகரித்து சிறப்புரையாற்றுகிறார்.

இதில், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கின்றனர். முன்னதாக சென்னையிலிருந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமானம் மூலம் மாலை 4.45 மணிக்கு திருச்சி விமான நிலையம் வருகிறார். அவருக்கு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். தொடர்ந்து அவர் சாலை மார்க்கமாக சிறுகனூர் பிரச்சாரக் கூட்ட மைதானத்துக்கு செல்கிறார். பிரச்சார பொதுக்கூட்டம் முடிந்ததும் அங்கிருந்து சாலை மார்க்கமாக தஞ்சாவூர் செல்கிறார். பின்னர் தஞ்சை, நாகை பகுதிகளில் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து சனிக்கிழமை பிரச்சாரம் செய்கிறார்.

தொடர்ச்சியாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, நாமக்கல், கரூர், வேலூர், அரக்கோணம், திருவண்ணாமலை, ஆரணி, கடலூர், விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, புதுச்சேரி, மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, திருவள்ளூர், வடசென்னை, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மார்ச் 25,26,27,29,30,31 மற்றும் ஏப்ரல் 2,3,5,7,6,9,10,12,13,15,16 ஆகிய தேதிகளில் பிரச்சாரம் செய்கிறார். இறுதியாக ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னையில் வேட்பாளர்களை ஆதரித்து இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். மொத்தம் 20 நாட்கள் முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

மாவட்ட அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி; சாம்பியன் பட்டத்தை வென்ற திருச்சி அணி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Trichy won the champion title for District Level Shooting Competition

திருச்சியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் திருச்சி ரைபிள் கிளப் அணி சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது. 

திருச்சி மாநகர காவல்துறை கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் மாநகர ரைபில் கிளப் 31.12.2021 ஆம் தேதி தொடங்கப்பட்டது. மாவட்ட, தேசிய மற்றும் சர்வதேச அளவில் துப்பாக்கி சுடும் போட்டிக்கு கலந்து கொள்ள பயிற்சி பெறும் வகையில் செயல்பட்டு வரும் இந்த கிளப் திருச்சி மாநகர காவல் ஆணையர் ந. காமினி தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்திய ரைபிள் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த ரைபிள் கிளப்பில் மாவட்ட அளவிலான ஏர் பிஸ்டல் மற்றும் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஏப்ரல் 27ல் தொடங்கி 28 வரை இருநாள்கள் நடைபெற்றன.

இதில் திருச்சி ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்ற சுமார் 340 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் 10 மீட்டர் சுடுதளத்தில் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் சிறுவர்கள், இளையோர் மற்றும் முதியவர்கள் என ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு என தரம் பிரிக்கப்பட்டு சப்யூத், யூத், ஜீனியர், சீனியர், மாஸ்டர் மற்றும் சீனியர் மாஸ்டர் என தனித்தனியாக பல்வேறு பிரிவுகளில் நடைபெற்றது. இந்த போட்டியில் பெரும்பாலான போட்டிகளில் வெற்றி அதிக புள்ளிகளைப் பெற்று திருச்சி ரைபிள் கிளப் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச்சென்றது. 

போட்டியில் பங்கேற்ற மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜி. கார்த்திகேயன் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இரு வெள்ளி பதக்கங்களை வென்றார். மேலும் ஏர் பிஸ்டல் மற்றும் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை(28-04-24) பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்க செயலாளர் மற்றும் திருச்சி ரைபிள் கிளப் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் வெற்றிபெற்ற 76 பேருக்கு தங்க பதக்கமும், 69 பேருக்கு வெள்ளி, 50 நபர்களுக்கு வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 195 பதக்கங்கள் வழங்கப்பட்டது. மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜி கார்த்திகேயன் அவற்றை வழங்கி பாராட்டினார்.