Re-action against Governor's action; The Chief Minister is assured

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த பலர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அதை தடை செய்ய வேண்டும் என்றுபல்வேறு தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாட்டு குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அக்குழு தாக்கல் செய்த அறிக்கையின் படி ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்றப்பட்டது.

Advertisment

இந்த தடை குறித்தசட்ட மசோதாவை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி சட்டப்பேரவையில் தமிழக அரசு நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. இதற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் இதில் சில விளக்கங்களைக் கேட்டிருந்தார். தொடர்ந்து டிசம்பர் 1 ஆம் தேதி ஆளுநரைச் சந்தித்து விளக்கம் அளிக்கப்பட்டது. எனினும் 4 மாதங்கள் மசோதா கிடப்பில் இருந்த நிலையில், சட்டம்இயற்றும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை எனக் கூறி சட்ட மசோதாவை அரசுக்கே மீண்டும் ஆளுநர் திருப்பி அனுப்பினார். மேலும், அதில் சில திருத்தங்களை மேற்கொள்ளுமாறு அரசுக்கு அறிவுறுத்தி இருந்ததாகவும் தகவல் வெளியானது.

Advertisment

2 வாரங்களுக்கு முன்னர்மார்ச் 9 ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் 2023 - 2024 நிதியாண்டிற்கான தமிழகத்தின் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் அறிக்கை தாக்கல் செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்ட தடைசட்ட மசோதாவை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது.

சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதையடுத்து மீண்டும் பேரவையில் மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க அமைச்சரவை முடிவு செய்தது. இரண்டாம் முறையாக ஆன்லைன் ரம்மி தடைசட்ட மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால் ஆளுநர் அதற்கு ஒப்புதல் தர வேண்டும் என்பது சட்டம் என்பதால் தமிழக அமைச்சரவையின் இந்த முடிவு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டது.

Advertisment

இந்நிலையில் இன்று கூடும் சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்படுகிறது. மேலும், ஆளுநர் எழுப்பி இருந்த கேள்விகளுக்கு அரசு பதில் தந்து பேரவையில் விளக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.