கலை ஒன்றை நாம் கற்று வைத்திருந்தால் தான் நமக்கு தன்னம்பிக்கை இருக்கும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
சென்னை அடுத்த வேலப்பன்சாவடியில் உலக வீரக்கலை சம்மேளனம் சார்பில் 25 ஆவது தமிழ்நாடு வீரக்கலை போட்டிகள் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். முடிவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சீமான் பரிசுகளை வழங்கினார்.
இவ்விழாவில் பேசிய அவர், “தற்காப்புக் கலை பயிற்சிகள் அளவு கடந்த தன்னம்பிக்கையை நமக்குள் தரும். அசாத்திய துணிச்சலை நமக்குள் விதைக்கும். நமக்குள் இருக்கும் கோழைத்தனத்தையும் பயத்தையும் அது போக்கும். நமது பாரம்பரிய கலைகளை குறிப்பாக வீரக் கலைகளை அழியவிடாமல் பாதுகாக்கும் பொறுப்பும் கடமையும் நமக்கு இருக்கிறது. கலை ஒன்றை நாம் கற்று வைத்திருந்தால் தான் நமக்கு தன்னம்பிக்கை இருக்கும். தெருவில் யாராவது சத்தம் போட்டால் கதவை சாத்திவிட்டு படுக்கக் கூடாது. யாருடா அங்க என கேட்கணும்” என்றார்.