Skip to main content

“ஒவ்வொரு கட்சிக்கும் அவர்களது கொள்கைகளை பற்றி பேச உரிமை உள்ளது” - சல்மான் குர்ஷித்

Published on 23/12/2022 | Edited on 23/12/2022

 

salman kursith talks about rahul bharat jadoo yatra

 

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. இந்தியா முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து உரையாடி வருகிறார். கடந்த செப்.7 ஆம் தேதி தொடங்கிய இந்திய ஒற்றுமைக்கான நடைபயணத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை அசைத்து தொடங்கி வைத்தார். இந்தியாவின் இறையாண்மையும் அரசியலமைப்புச் சட்டமும் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி குமரி முதல் காஷ்மீர் வரை இந்தப் பயணத்தை 150 நாட்களுக்கு மேற்கொள்ளும் ராகுல் காந்தி, சில தினங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் பாத யாத்திரையின் 100 வது நாளை நிறைவு செய்தார்.

 

ராகுல் காந்திக்கும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்க்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடிதம் ஒன்றை எழுதினார். அதில், "இந்திய ஒற்றுமை யாத்திரையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். அவ்வாறு பின்பற்ற இயலாவிட்டால் இந்திய ஒற்றுமை யாத்திரையை பொதுநலன் கருதி நிறுத்திக் கொள்ள வேண்டும்" என அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

 

செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், "ராகுல் காந்தியின் ஒற்றுமை பயண யாத்திரைக்கு மக்கள் ஆதரவு நாளுக்கு நாள் பெருகி வருவதை கண்டு பாஜக பயந்து விட்டது. மத்திய அமைச்சர்கள் இப்படி கடிதம் எழுதுவது மத்திய அரசு மிகவும் பயந்து விட்டது என்பதை காட்டுகிறது. இந்த ஒற்றுமை யாத்திரையை சீர்குலைக்கவே மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா இவ்வாறு கடிதம் எழுதுகிறார்" என்றார். இதே போன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பவன் கெராவும் தனது கண்டனத்தை தெரிவித்து இருந்தார். இதே போன்று பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமாரும் மத்திய அரசுக்கு எதிராக தனது கருத்துகளை தெரிவித்து இருந்தார்.

 

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் பேசும்போது, "ராகுல் காந்தி நடத்தி வரும் இந்திய ஒற்றுமை பயணத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படும். ஆனால் எக்காரணத்தை கொண்டும் இந்த யாத்திரை நிறுத்தப்பட மாட்டாது. ஜனநாயக நாட்டில் ஒவ்வொரு கட்சிக்கும் அவர்களது கொள்கைகளைப் பற்றி பேச உரிமை உள்ளது. காங்கிரஸ் கட்சியின் இந்த ஒற்றுமை பயணத்தை கண்டு மத்திய அரசு பயந்து விட்டது. அதனால் தான் இந்த யாத்திரையை நிறுத்த பல்வேறு வழிகளில் உத்தரவுகளையும், கடிதங்களையும் மத்திய அரசு எழுதி வருகிறது. அவர்கள் கொரோனாவை பார்த்து பீதி அடையவில்லை. ராகுலின் பாதயாத்திரையை கண்டு தான் பீதி அடைந்து விட்டனர். மத்திய அமைச்சரின் கடிதத்தை நாங்கள் பெரிதாக  எடுத்துக் கொள்ளப் போவதில்லை" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்