Skip to main content

கோயம்பேட்டில் உள்ள அரியலூர் மாவட்ட தொழிலாளர்கள் ஊர் திரும்ப தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் : சிவசங்கர்

Published on 02/05/2020 | Edited on 02/05/2020

 

S. S. Sivasankar


கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரியும், அரியலூர் மாவட்ட தொழிலாளர்கள் ஊர் திரும்ப தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அரியலூர் மாவட்ட தி.மு.க செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு கரோனா தொற்று பெருமளவில் பரவி வருகிறது. அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் பணியாற்றுகின்றனர். அங்கு கரோனா பரவி வரும் சூழலில் அனைவரும் ஊருக்குத் திரும்பி வர விரும்புகின்றனர். பலர் காய்கறி வரும் லாரிகளில் வந்து கொண்டும் இருக்கிறார்கள். 
 

வெளி மாநிலத் தொழிலார்கள் ஊர் திரும்ப ஏற்பாடு செய்வது போல, கோயம்பேட்டில் இருக்கும் அரியலூர், பெரம்பலூர் மாவட்ட தொழிலாளர்களைத் தொடர்பு கொண்டு அவர்களுக்குப் பேருந்து வசதிகளை ஏற்பாடு செய்து தந்திட தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.


கோயம்பேட்டில் இருந்து ஊர் திரும்பியவர்களில் செந்துறை ஒன்றியம் நமங்குணம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு, நேற்று கரோனா தொற்று பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டது. இன்று அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 20 நபர்களுக்குப் புதிதாகத் தொற்று பாதித்துள்ளதாகத் தகவல் வருகிறது.
 

மாவட்ட நிர்வாகம் சிறப்பாகச் செயல்பட்டு மாவட்டத்திற்குள் தொற்று பரவாமல் தடுத்திருந்த நிலையில், அரசு கோயம்பேட்டிலிருந்து ஊர் திரும்பும் தொழிலாளர்களைக் கண்காணிக்கத் தவறி விட்டது. இப்போது அரியலூர் மாவட்டம் முழுதும் பல கிராமங்களில் கரோனா தொற்று உள்ளவர்கள் இருக்கிற சூழல் வந்து விட்டது. இந்தத் தவறு முழுதும் அரசையே சேரும்.
 

வந்தவர்களையும் ரத்த மாதிரி எடுத்துக் கொண்டு வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். ஊரில் இருந்த மூன்று நாட்களில் அவர்கள் எத்தனை பேரைச் சந்தித்தார்கள் என்று தெரியவில்லை. எத்தனை பேருக்கு தொற்று பரவி இருக்கிறது என்றும் தெரியவில்லை. மாவட்டம் முழுதும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.
 

http://onelink.to/nknapp

 

தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பங்கள் அந்த கிராமங்களிலேயே இருக்கிறார்கள். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வீட்டிலேயே உள்ளதால் உணவுக்குச் சிரமப்படுகிறார்கள். கழிவறை வசதி இல்லாத வீட்டைச் சேர்ந்தவர்கள், ஏரி குளத்திற்குச் செல்லும் நிலை. அவர்களைக் கண்டு ஊரிலுள்ள மற்றவர்கள் பயப்படும் நிலை. இதனால் தேவையில்லாத சண்டை, சச்சரவுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. 
 

 

எனவே இவர்களைக் கழிவறை வசதி உள்ள பள்ளிகளில் தங்க வைத்து, உணவளித்து உதவிட வேண்டும். அப்போது தான் தொற்று பரவாமல் தடுக்கலாம். வரும் முன் காக்கும் பணியை அரசு செய்திருக்க வேண்டும். ஆனால், அரசு தவற விட்டுவிட்டது. இதற்கு மேல் தொற்று பரவிடாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கைகளை எடுத்திட அரியலூர் மாவட்ட தி.மு.கழகத்தின் சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

 

சார்ந்த செய்திகள்