Skip to main content

திருச்சி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்களின் சொத்து விவரங்கள்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Property details of Trichy parliamentary constituency candidates

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்து வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வந்தன. இதனைத் தொடர்ந்து தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் கடந்த 20ம் தேதி துவங்கி 27ம் தேதி வரை நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன் காரணமாக நேற்று தமிழ்நாட்டில் பல்வேறு தொகுதிகளிலும் முக்கிய கட்சி வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில் வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்து மதிப்பு விவரங்களைத் தேர்தல் ஆணையம் இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த வகையில் திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு விவரங்கள் வெளியாகியுள்ளது.

ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ:
 
திருச்சி பாராளுமன்றத் தொகுதி வேட்பாளர்களில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவுக்கு ரூ. 35.90 கோடிக்கு சொத்து உள்ளதாக அவரது வேட்பு மனுவுடன் இணைத்துள்ள ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளார்.

ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ ரூ. 2,05,000, அவரது மனைவி கீதா ரூ. 5,02,000, மகன் வருண் ரூ. 2,500, மகள் வானதி ரேணு ரூ. 2,000. மற்றும் அவரது குடும்பத்தினர் பெயர்களில் அசையும் சொத்தாக ரூ. 2,18,94,789, அசையா சொத்துக்கள் ரூ. 33,71,89,498 என மொத்தம் ரூ.35,90,84,287(35.90 கோடி)உள்ளது. மேலும் ஒரு கார் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு கடன் ரூ.1,35,65,000 உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். (2.07 கிலோ தங்க நகைகள், 6.38 வெள்ளி, ரூ.19 லட்சம் மதிப்பிலான வைர நகைகள் உள்பட ரூ.1.35 கோடி கடன்). துரை வைகோ மீது எந்த வழக்கும் இல்லை.

அ.தி.மு.க. வேட்பாளர் ப. கருப்பையா:

அ.தி.மு.க. வேட்பாளர் கருப்பையா, அவரது மனைவி விமலா, மகன் குருநாத் பன்னீர்செல்வம், மகள் மகிபாலாநானி ஆகியோரது பெயர்களில் அசையும் சொத்துகள் ரூ. 2,52,08,542 மற்றும் அசையா சொத்தாக ரூ. 30,75,000 என மொத்தம் ரூ. 2,82,83,542 ( 2.82 கோடி) உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரிடம் 3 கார்கள், 5 டிப்பர் லாரிகள் உள்ளன. 506 கிராம் தங்க நகைகள் உள்ளன. ரூ.3.07 கோடி கடன் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். கருப்பையா பெயரில் கறம்பக்குடி காவல் நிலையத்தில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது.

அ.ம.மு.க. வேட்பாளர் ப. செந்தில்நாதன்:

அ.ம.மு.க. வேட்பாளர் ப. செந்தில்நாதன், அவரது மனைவி மகேஸ்வரி, மகள்கள் பவித்ரா, யாழினி ஆகியோர் பெயரில் அசையும் சொத்துகள் ரூ.88,31,187 அசையா சொத்துகள் ரூ.7.30 கோடி என மொத்தம் ரூ.8.18 கோடி சொத்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்களிடம் 1.100 கிலோ தங்கம் உள்ளது. ரூ.64.08 லட்சம் கடன் உள்ளது. 2 கார், ஒரு இரு சக்கர வாகனம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவர் மீது திருச்சி கோட்டை, தில்லை நகர் ஆகிய காவல் நிலையங்களில் தலா ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Father sentenced to life imprisonment for misbehaving with daughter

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் 64 வயதான விவசாயி. இவருக்கு 35 வயதில் மாற்றுத்திறனாளி (மன நலம் பாதிக்கப்பட்ட ) ஒரு மகள் இருந்தார். கை, கால்களும் செயல் இழந்த அந்த பெண் தனது தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்த நிலையில் அவரது தாயார் இறந்து விட்டார்.

இதனையடுத்து தனது தந்தை மற்றும் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2021 ஆவது ஆண்டில் பெண்ணின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து, மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இதில் மாற்றுத்திறனாளியான அந்த பெண் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து அவரது உறவினர்கள் முசிறி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தந்தையான விவசாயியே அவரது மகளை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய விவரம் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அடுத்த சில மாதங்களில், பெண்ணுக்கு குறை பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்தது. மேலும் 5 மாதங்கள் கழித்து உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த பெண்ணும் உயிரிழந்தார்.

இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு நடந்து வந்தது. வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து விவசாயிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசுத்தரப்பு சிறப்பு வழக்குரைஞராக ஜாகிர் உசேன் ஆஜரானார்.