Skip to main content

“பிரதமர் மோடி விஸ்வகுருவா? அல்லது மெளனகுருவா?” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Is Prime Minister Modi Vishwaguru or Melanaguru CM MK Stalin

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மக்களவை தொகுதிகளுக்கான தி.மு.க. மற்றும் அதன் கூட்டணியின் வேட்பாளார்களை ஆதரித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எட்டையபுரத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை இன்று (26.12.2024) மேற்கொண்டார்.

இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர்  மு.க. ஸ்டாலின் பேசுகையில், “வரும் மக்களவைத் தேர்தல் ஜனநாயகத்தை காப்பாற்றுகின்ற அறப்போராட்டம். சர்வாதிகாரத்தில் இருந்து இந்தியாவை காப்பாற்ற வேண்டிய தேர்தல் இது. மதத்தின் பெயரில் அரசியல் செய்யும் பா.ஜ.க.வுக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் வைக்கப்பட்ட கரும்புள்ளி தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் ஆகும். அன்று கேட்ட மரண ஓலம் இன்றும் கேட்டுக் கொண்டே இருக்கிறது. செய்திகள் மூலம் தான் தூப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றி தெரிந்து கொண்டேன் என்று அப்போதைய முதலமைச்சர் பழனிசாமி சொன்னது பொய். எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தூத்துக்குடியில் துப்பாக்கிசூடு நடத்தி 13 பேர் கொலை செய்யப்பட்டனர். ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிந்து தான் துப்பாக்கி சூடு நடந்துள்ளது என நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையமே தெரிவித்துள்ளது.

Is Prime Minister Modi Vishwaguru or Melanaguru CM MK Stalin

தூத்துக்குடி கலவரத்தில் ஈடுபடாதவர்கள் மீது அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட வழக்குகள் திரும்ப பெறப்பட்டது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்பதற்கு உச்சநீதிமன்றத்தில் வலுவான வாதத்தை தமிழ்நாடு அரசு முன் வைத்துள்ளது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் கட்சத்தீவு மீட்கப்படும் என்று கூறினீர்களே. அது நடந்ததா?. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் கருப்பு பணத்தை மீட்டு ரூ.15 லட்சம் தருவோம் என்று சொன்னீர்களே. அதனை செய்தார்களா. பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை தலைவிரித்து ஆடுகிறது. விவசாயிகளை எதிரி போல் நடத்துவது தான் பா.ஜ.க.வின் அரசின் மாடலா. தி.மு.க. அரசின் கொள்கை எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே ஆகும். பேரு மட்டும் பிரதமர் வீடு கட்டும் திட்டம். ஆனால் அதில், 60% நிதி மாநில அரசுதான் தருகிறது. இப்படி ஸ்டிக்கர் ஒட்டி கேவலமாக பிரசாரம் செய்கின்றனர்.

Is Prime Minister Modi Vishwaguru or Melanaguru CM MK Stalin

பழனிசாமி யார்?. நேற்று யாரோடு இருந்தார்?. இன்று யாரோடு இருக்கிறார்? நாளை யாருடன் இருப்பார்?. நேரத்திற்கு ஏற்றார் போல் மாறுவார் என்பதை மக்கள் எடை போட்டு தீர்ப்பளிப்பார்கள். பழனிசாமி அவர்களே உங்களுக்கு முன்னாள், இன்னாள் கிடையாது என்னாளும் பா.ஜ.க.தான் எஜமானரா?. மோடியை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசாத பாதம்தாங்கி பழனிசாமிதான் தமிழ்நாட்டை காப்பாற்றப் போகிறாரா?. பழனிசாமி அவர்களே! மாநில உரிமைகளை அடகு வைத்ததே நீங்கள்தான். மோடி பற்றி பாசாங்கிற்குகூட பத்து வார்த்தை பேசாத பழனிசாமி, மாநில உரிமைகளை மீட்கப் போகிறாராம். பச்சைப் பொய் பழனிசாமினு மக்கள் சும்மாவா சொன்னாங்க. தி.மு.க. - அ.தி.மு.க. இடையே தான் போட்டி என எடப்பாடி பழனிசாமி சொல்லி இருக்காரு. அந்த அளவிற்காவது அவருக்கு புரிதல் இருக்கே என்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. பழனிசாமி அவர்களே களத்தில் மோதுவோம் மக்கள் தீர்ப்பளிக்கட்டும்.

Is Prime Minister Modi Vishwaguru or Melanaguru CM MK Stalin

தமிழக மீனவர்கள் கைது, அபராதம் விதிப்பு, படகுகள் பறிமுதல் என மோடி ஆட்சியில் இலங்கை அரசு அறிவிக்கப்படாத போரை நடத்திக் கொண்டிருக்கிறது. மீனவர்கள் விவகாரத்தில் வாய் திறக்காத பிரதமர் மோடி விஸ்வகுருவா? அல்லது மௌனகுருவா?. கச்சத்தீவு மீட்கப்படும் என்று சுஷ்மா ஸ்வராஜ் சொன்னார். ஆனால் இன்று வரை பா.ஜ.க. அரசு அதை செய்துள்ளதா. தமிழக மீனவர்களை காக்கத்தவறிய மோடி எந்த முகத்தை வைத்து வாக்கு கேட்க வருகிறார்” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.