Skip to main content

‘அண்ணாமலை  இல்லை’ - பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு பழனிசாமி பதில்!

Published on 03/04/2023 | Edited on 03/04/2023

 

Palaniswami's answer to the question of 'No Annamalai' BJP alliance!

 

தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “மத்தியில் இருக்கிறவர்கள் தான் கூட்டணியை இறுதி செய்பவர்கள். மாநிலத்தில் இருப்பவர்கள் அல்ல” எனக் கூறியுள்ளார். அதிமுக - பாஜக கூட்டணி குறித்து அண்ணாமலை, “9 மாதங்கள் இருக்கும் பொழுது இப்பொழுதே முதலுரையும் முடிவுரையும் எழுத முடியாது” எனக் கூறிய நிலையில் எடப்பாடி பழனிசாமி இக்கருத்தை தெரிவித்துள்ளார்.

 

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு டெல்லி செல்வதற்காக சென்னை விமானநிலையத்திற்கு வந்தார். அப்போது அங்கே தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அமித்ஷா அதிமுக பாஜக கூட்டணியை உறுதி செய்துவிட்டார் என ஒரு தமிழ் சேனலில் போட்டிருந்தீர்கள். நான் சொல்வதைத்தான் அமித்ஷாவும் சொல்கிறார். 

 

தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் உள்ளன. கூட்டணிக்கான தொகுதி பங்கீடு உள்ளது. நமக்கும் அவர்களுக்குமான கொள்கை எப்படி உள்ளது, 2024ல் பாஜக எங்கு நிற்க வேண்டும் என்று ஒன்றுள்ளது. இதுபோல் பல விஷயங்கள் உள்ளன. எதுவும் கல்லில் எழுதப்பட்ட வாக்கியங்கள் கிடையாது. மாநிலத் தலைவராக என் கருத்தை நான் சொல்லியுள்ளேன். கட்சியின் விருப்பம் தொண்டர்களின் விருப்பம் என அதிகமானோர் சொல்லியுள்ளார்கள். 9 மாதங்கள் இருக்கும் பொழுது இப்பொழுதே முதலுரையும் முடிவுரையும் எழுத முடியாது” எனக் கூறியிருந்தார்.

 

இந்நிலையில், இன்று சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “எங்களைப் பொறுத்தவரை பாஜக ஒரு தேசிய கட்சி. கூட்டணி பேச்சுவார்த்தையை பொறுத்தவரையில் பிரதமர் மோடியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பாஜக தேசிய தலைவர் நட்டா ஆகியோரும் தான் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இங்கிருக்கும் தலைவர்களும் மத்தியில் உள்ள தலைவர்கள் தான் கூட்டணி குறித்து முடிவு செய்வார்கள் எனக் கூறியுள்ளார்கள். மத்தியில் இருப்பவர்கள் கூட்டணி தொடரும் என்றே சொல்லியுள்ளார்கள். மத்தியில் இருக்கிறவர்கள் தான் கூட்டணியை இறுதி செய்பவர்கள். மாநிலத்தில் இருப்பவர்கள் அல்ல” எனக் கூறியுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்