Skip to main content

நம்மால் மட்டுமே முடியும்! -ராமதாஸ்

Published on 22/04/2021 | Edited on 22/04/2021
ddd

 

எந்தக் கூட்டணி அதிக இடங்களை பிடிக்கும்? எந்தக் கட்சி அடுத்து ஆட்சி அமைக்கும் என விவாதங்கள் பொதுமக்கள் மத்தியில் நடந்து வருகிறது. அரசியல் கட்சித் தலைவர்களோ, தீவிர பிரச்சாரத்தில் இருந்து தற்போது ஓய்வு எடுத்து வருகின்றனர். மேலும் கரோனா என்பதால் அவர்களும் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். கரோனா பரவலை தடுக்க அனைவரும் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர். 

 

இந்தநிலையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது முகநூல் பக்கத்தில், ''இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சத்து 16 ஆயிரம் என்ற உச்சத்தைக் கடந்து விட்டது.  கடந்த 24 மணி நேரங்களில் மட்டும் 2100-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்து விட்டனர். கரோனா பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கின்றன.

 

கரோனா வைரஸ் பரவலுக்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் முதல் காரணம் நாம் தான் என்பதை மறுக்க முடியாது. அனைவரும் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட விதிகளை பின்பற்றினால் அடுத்த 2 அல்லது 3 வாரங்களில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தி விட முடியும். ஆனால், நாம் அதை செய்வதில்லை. அதனால் தான் உலகிலேயே மிக அதிக அளவில் கரோனா பாதிப்புக்கு உள்ளான நாடாக நாம் மாறியிருக்கிறோம்.

 

இப்போதும் ஒன்றும் கைமீறிச் சென்று விட வில்லை. தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியில் செல்வதைத் தவிருங்கள். வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணியுங்கள். சமூக இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியில் சென்று வந்த பின்னர் கைகளை சுத்தம் செய்யுங்கள். பாதுகாப்பு விதிகளை நாம் முறையாக பின்பற்றினால் கரோனா பாதிப்பில் உலகின் முதல் நாடாக இப்போது இருக்கும் இந்தியாவை , விரைவில் உலகின் கடைசி நாடாக கொண்டு செல்ல முடியும். கரோனாவை கட்டுப்படுத்த நம்மால் முடியும்.... நம்மால் மட்டுமே முடியும்! என கூறியுள்ளார். 
 

சார்ந்த செய்திகள்