விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் நிறுவனம் சார்பில் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நந்தம்பாக்கத்தில் நேற்று (06.12.2024) நடைபெற்றது. த.வெ.க. தலைவர் விஜய் இந்நூலை வெளியிட ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், “தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை உருவாக்க வேண்டும். எனவே மன்னராட்சியை ஒழிக்க வேண்டிய நேரம் இது” எனப் பேசியிருந்தார்.
இதனையடுத்து விசிக நிறுவனத் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் வேளச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர், ‘மன்னர் ஆட்சி குறித்து ஆதவ் ஆர்ஜூனா பேசியது தொடர்பாக என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், “கட்சியின் முன்னணி பொறுப்பாளர்கள், பொதுச் செயலாளர்களுடன் கட்டாயமாக அவர்களிடம் கலந்து பேசி ஒரு முடிவை எடுப்போம்” எனத் தெரிவித்தார். மேலும் ஆதவ் அர்ஜுனாவைக் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என மூத்த நிர்வாகிகள் யாரும் அழுத்தம் கொடுக்கிறார்களா?” எனச் செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு, “ஆதவ் அர்ஜுனாவுடைய பேச்சு, கூட்டணி நலன், கட்சி நலன் ஆகியவற்றிற்கு எதிராக இருக்கிறது என்ற கருத்தை என்னுடன் பகிர்ந்து கொள்கிறார். யாரும் என்னுடன் யாரும் என்ன அழுத்தம் கொடுக்கவில்லை” எனத் தெரிவித்தார். மற்றொரு செய்தியாளர் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு விசிகவிற்கு ஆறுதலைத் தருமா?” எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு, “இல்லை என்பதால் தான் கூடிப் பேச உள்ளோம். ஆதவ் அர்ஜுனா பேசியது தவறு. அவ்வாறு வெளிப்படையாக தன்னுடைய கருத்தாக இருந்தாலும், கூட கட்சியின் துணை பொதுச் செயலாளராக இருக்கும் நிலையில், கட்சியின் கருத்தாகத் தான் மக்களால் பார்க்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடியில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ஆதவ் ஆர்ஜூனாவின் பேச்சு குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “நான் சினிமா செய்திகளைப் பார்ப்பதில்லை. யாருங்க பிறப்பால் முதல்வரானது?. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு தான் முதல்வர் ஆனார். அந்த அறிவு கூட அந்த ஆளுக்கு இல்லை” எனத் தெரிவித்தார்.